ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டும் என் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அறுதிப்பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளது.
128 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன.
ஜெருசலேம் நகரத்துக்கு இஸ்ரேலும் பாலத்தீனமும் உரிமை கொண்டாடி வரும் நிலையில் இது ஒரு தீர்க்கப்படாத சர்ச்சையாக,த் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக ஏற்பதாக அண்மையில் அமெரிக்கா அறிவித்தது.
தற்போது ஐக்கியநாடுகள் பொதுச் சபையில் நிறைவேறியுள்ள தீர்மான வாசகத்தில், ஜெருசலேம் நகரம் தொடர்பான எந்த முடிவும் செல்லத்தக்கதல்ல என்றும் ரத்து செய்யப்படவேண்டியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பவர்களுக்கு நிதியுதவிகள் நிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்த பின்பும் இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
மிரட்டலையும், அச்சுறுத்திப் பணியவைக்கும் முயற்சியையும் நிராகரிக்கவேண்டும் என வாக்கெடுப்புக்கு முன்னதாக பாலத்தீன வெளியுறவு அமைச்சர் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
எதிர்பார்க்கப்படும் முடிவினை முற்றாக நிராகரிக்கப்போவதாக வாக்கெடுப்புக்கு முன்னதாகக் கூறிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஐ.நா.வை ‘பொய்களின் அவை’ என்று குறிப்பிட்டார்.