சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இருநாடுகளுக்கிடையேயும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஜனவரி முதல் தகவல்கள் பறிமாறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்கவும், அது பற்றிய தகல்களை சேகரிக்கவும் அந்த நாட்டுடன் இந்திய மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்நிலையில், கறுப்பு பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தம் நேற்றையதினம் கையெழுத்தானது. இதில் இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் அண்ட்ரிஸ் பாவும், இந்திய மத்திய நேரடி வரிவிதிப்பு வாரிய தலைவர் சுஷில் சந்திராவும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியர்கள் சுவிட்சர்லாந்து வங்கியில் கணக்கு வைத்திருந்தால், அந்த வங்கியின் அதிகாரிகள் கணக்கு வைத்திருப்பவர் குறித்த விபரங்களை உடனடியாக இந்திய அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பர்.
இரு நாடுகளுக்கு இடையே போடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தின் கீழ், சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவரின் பெயர், வங்கி கணக்கு எண், முகவரி, உள்ளிட்ட விபரங்களுடன் கணக்கில் இருக்கும் இருப்பு தொகை, நிதி சொத்துக்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட விபரங்கள் ஆகிய விபரங்கள் பரிமாறிக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.