ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பு வீழ்த்தப்பட்ட பின், முதல் முறையாக மொசூல் நகரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிறிஸ்மஸ் பிராத்தனை நடைபெற்றுள்ளது. ஐ.எஸ் ஆட்சி இருந்தபோது இங்கு பொதுவெளியில் கிறிஸ்துவ சடங்குகளை செய்வது என்பது சிரமமாக காணப்பட்டது.
இங்கு வாழ்ந்த கிறிஸ்துவர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என ஐ.எஸ் அமைப்பு கட்டாயப்படுத்தியதுடன் அவர்கள் வரி கட்ட வேண்டும் அல்லது உயிரிழக்க வேண்டும் எனவும் ஐ.எஸ் அமைப்பு மிரட்டி வந்தது. இதன்காரணமாக பல கிறிஸ்துவர்கள் அங்கிருந்து தப்பித்து வெளியேறிய நிலையில் கடந்த ஜூலை மாதம் ஈராக் படைகள் ஐ.எஸ் அமைப்பை மொசூலில் வீழ்த்தின.
ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான 3 வருட சண்டையில் ஈராக் வெற்றிபெற்றதாக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி அறிவித்திருந்தார். இந்த நிலையில் மொசூலின் செயிண்ட் போல் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் பிராத்தனை இடம்பெற்றுள்ளன. இதன்போது தேவாலயத்தின் வெளியே ஆயுதம் தாங்கிய வாகனங்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தன.
உலகில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காகவும், மொசூல், ஈராகின் அமைதிக்காகவும், பிராத்தனை செய்யுமாறு ஈராக் நாட்டின் கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் லூயிஸ் ரபேல் சகோ வேண்டுகோள் வைத்தார். ஐ.எஸ் வீழ்த்தப்பட்ட பின் மொசூலுக்கு திரும்பிய கிறிஸ்துவரான பர்காத் மால்கோ, கிறிஸ்தவ வாழ்க்கையைத் தொடர இங்கு பிராத்தனை நடத்துவது முக்கியம் என தெரிவித்துள்ளார்.
செயின்ட் போல் தேவாலயம் மட்டுமே மொசூலில் செயல்படும் ஒரே தேவாலயம். 2014-ல் ஐ.எஸ் அமைப்பு தீவிரமாக செயல்படுவதற்கு முன்பு, மொசூலில் 35,000 கிறிஸ்தவர்கள் இருந்ததாக தேவாலய தலைவர்கள் கூறுகின்றனர்.