ஐநா பாதுகாப்பு பேரவை விதித்துள்ள புதிய பொருளாதார தடையை ஏற்க முடியாது எனவும் இது போர் தொடுக்கும் செயல் எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வடகொரிய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கா அணு ஆயுதங்களை தயாரிக்கிறோம் எனவும் இது சர்வதேச விதிமுறைக்கு எதிரானது அல்ல எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் தங்கள் நாட்டின் மீது ஐ.நா. புதிய பொருளாதார தடை விதித்துள்ளதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் காரணம் எனவும் இது கொரிய தீபகற்ப பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து போர் தொடுக்கும் செயல் ஆகும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றதனையடுத்து வடகொரியா மீது ஏற்கெனவே பல பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில் இப்போது புதிதாக ஒரு பொருளாதார தடை விதிக்க ஐ.நா.பாதுகாப்பு பேரவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதன்படி, வடகொரியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை உலக நாடுகள் குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அத்துடன் தங்கள் நாட்டில் உள்ள வடகொரிய தொழிலாளர்களை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.