அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வு வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை திருக்கோவில் கரையோரப் பிரதேசத்தை அழிவுக்கு உட்படுத்தும் என கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் திருக்கோவில் கரையோரப் பிரதேசம் பாரிய அழிவுகளை சந்திக்கும் அபாயம் உள்ளதாகவும் இதனை உடனடியாக அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரியும், திருக்கோவில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பாரிய பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி உள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம், ‘திருக்கோவில் பிரதேசத்தினை காப்போம் – “மாபியாக்களை விரட்டுவோம்” எனும் தொனிப்பொருளில் இன்று (27.12.17) இடம்பெற்றது. தம்பட்டடை, தம்பிலுவில் மக்கள் தம்பிலுவில் ஆதவன் விளையாட்டு மைதானத்திலும், திருக்கோவில் மக்கள் திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் முன்பாகவும், விநாயகபுரம் மக்கள் விநாயகபுரம் பேரூந்து தரிப்பிடம் ஆகிய மூன்று இடங்களில் கூடி, அவ் இடங்களில் இருந்து பேரணியாக சென்று திருக்கோவில் மணிக்கூட்டுகோபுர சந்தியில் ஒன்றுகூடினர். இவ்வாறு திரண்ட 3,000க்கும் மேற்பட்ட மக்கள், வீதிகளின் இருமருங்கிலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனிடம் மகஜர் ஒன்றினை, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டோர் கையளித்திருந்ததுடன், திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குச் சென்று, பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜனிடமும் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக சுமார் இரண்டு மணித்தியாலயங்களுக்கு மேலாக திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் வாகன நெரிசல் காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.