இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 3 ஆயிரத்து 515 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வறட்சி மற்றும் விளைச்சல் இல்லாத காரணத்தால் கர்நாடகாவில் இவ்வாறு குறித்த விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக மாநில வேளாண் துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துள்ளவர்களில் 2,525 பேர் மட்டுமே வறட்சி காரணமாக விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2015 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 2017 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 2,514 பேர் தற்கொலை செய்துள்ளனர் எனவும் அதில், 1,929 வழக்குகள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஏப்ரலில் இருந்து நவம்பர் வரை மாநிலத்தில் குறைவான மழைப்பொழிவு காணப்பட்டதாகவும் இதன் காரணமாக ஏற்பட்ட வறட்சியால் 624 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளே அதிக அளவில் இறந்துள்ளனர். மேலும், பருத்தி மற்றும் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.
தற்கொலை செய்தவர்களில் 30-40 சதவீதம் பேர் விவசாயம் செய்ய கடன் வாங்கிய நிலையில் கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்துள்ளனர் எனவும் இது தொடர்பாக 1,332 கந்து வட்டிக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.