ஒரே நேரத்தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா’ ; இன்று குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது. குறித்த மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவில் உள்ள கிரிமினல் சட்டப்பிரிவுகளை நீக்கம் செய்ய வேண்டும் என இம்மசோதா மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, அ.தி.மு.க சார்பில் பேசிய அன்வர் ராஜா, இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த மசோதாவை மிகக்கடுமையாக எதிர்த்து பேசிய ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசி, இந்த மசோதா அடிப்படை உரிமைகளை மீறுகிறது எனவும் முறையான சட்ட இணக்கம் இதில் இல்லை என்பதால் திரும்ப பெற வேண்டும் எனவும் கூறினார்.
உறுப்பினர்களுக்கு பதிலளித்து பேசிய ரவிஷங்கர் பிரசாத், பெண்களின் உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாக்கவே, இந்த மசோதா உருவாக்கப்பட்டதாகவும் இதில், மதத்திற்கு தொடர்பில்லை எனவும் தெரிவித்தார்
இதேவேளை ;, இன்று தாக்கல் செய்யப்பட்ட புதிய மசோதாவுக்கு அனைத்திந்திய இஸ்லாமிய பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் குறித்த மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் பாராளுமன்ற மேல்சபையில் இந்த மசோதா நிறைவேற்ற பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பப்பட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையொப்பமிட்ட பின்னர் இந்த மசோதா சட்ட வடிவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
3 முறை தலாக் சொன்னால் விவாகரத்து – இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான சட்ட மசோதா இந்திய நாடாளுமன்றத்திற்கு வருகிறது…
Dec 28, 2017 @ 03:12
இஸ்லாமிய மதத்தில் மனைவிக்கு கணவன் 3 முறை தலாக் சொன்னால் விவாகரத்து செய்யப்பட்டதாக நடைமுறையில் இருக்கும் முறையை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
இஸ்லாமிய மத வழக்கப்படி கணவன் மனைவிக்கு 3 முறை தலாக் கூறினால், அவர்களுக்கு விவாகரத்து ஏற்பட்டதாக அர்த்தம். இஸ்லாமிய பெண்களின் வாழ்வை பாதிக்கும் இந்த முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த ஓகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் முத்தலாக் முறையை நீக்க சட்டம் இயற்றலாம் என அறிவுறுத்தியது. இதனையடுத்து இந்த மசோதாவில் எத்தகைய விடயங்களைச் சேர்ப்பது என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்தது.
மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவை தாக்கல் செய்கிறார். ஸ்கைப், வட்ஸ் அப், மின்அஞ்சல், தகவல் அல்லது தொலைபேசி மூலமாக முத்தலாக் சொல்வது குற்றம் என இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. புதிய சட்ட மசோதா மூலம் பாதிக்கப்படும் பெண்கள் நீதிமன்றத்தை அணுகி தனக்கும் தன்னுடைய குழந்தைக்கும் தேவையான சலுகையை பெற முடியும்.
திருமணம் மற்றும் விவகாரத்து விஷயங்களில் மத ரீதியான நடைமுறைகள் இருப்பதை முடிவுக்கு கொண்டு வர பாரதீய ஜனதா கட்சி நீண்ட காலமாக ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு அம்சமாகவே முத்தலாக் முறைக்கு சட்ட மசோதா கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் முயற்கிக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய முஸ்லிம் பர்சனல் சட்ட அமைப்பு வாதாடிய போதும், அதன் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. இஸ்லாமிய ஆண்கள் ஸ்கைப், வட்ஸ் அப், மின்அஞ்சல் தகவல்கள் மூலம், முத்தலாக் சொல்லிவிட்டு குடும்பத்தை நிராதரவாக விட்டு விலகிச் செல்வதாக பல்வேறு முறைப்பாடுகள் வெளிவந்ததையடுத்து முத்தலாக் விவகாரம் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.