பசுமை ஆற்றல் மின் உற்பத்தியில் புதிய உச்சங்களை பிரித்தானியா தொட்டு இருப்பதாக, பிரிட்டனின் தேசிய மின்சார விநியோக அமைப்பின் தரவுகள் தெரிவித்துள்ளன. புதுபிக்கத்தக்க ஆற்றல்களான காற்றாலை மின்சாரம், சூரியசக்தி மின்சாரம் ஆகியவை நாட்டின் மின்சார தேவையில் இந்த ஆண்டு முக்கிய பங்கு வகித்து இருக்கிறது. அதாவது நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை விடவும், காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தின் அளவு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்பன் வெளியேற்றம்
பிரிட்டன், 2012ஆம் ஆண்டு முதலே தனது கார்பன் வெளியேற்றத்தை சரி அரைவாசியாக குறைத்துள்ளது. ஐரோப்பியா ஒன்றியத்தில் தூய்மை மின்சாரத்தை மக்களுக்கு விநியோகிக்கும் நாடுகளில், பிரிட்டன் நான்காவது இடத்தில் உள்ளது. உலக அளவில் அது ஏழாவது இடத்தில் உள்ளது.
`நிலக்கரி இல்லாமல்`
தொழிற்புரட்சி காலத்திலிருந்து, 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் முதல் முதலாக நிலக்கரி இல்லாமல் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தைக்கொண்டு, அதாவது மாற்று மின்சாரத்தைக் கொண்டு ஒரு நாள் முழுவதும் பிரிட்டன் இயங்கியது.
`மைகிரிட்-ஜிபி` எனும் ஓர் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், 2017 ஆம் ஆண்டின் 90 சதவிகித நாட்களில் நிலக்கரியைவிட, புதுப்பிக்கதக்க மின்சாரம் அதிக மின்சாரத்தை அந்நாட்டிற்கு வழங்கி உள்ளது.
நிலக்கரியைவிட, காற்றாலையால் தயாரிக்கப்பட்ட மின்சார அளவு இந்த ஆண்டு அதிகம். காற்றாலை மின்சாரம்தான் பிரித்தானிய மக்களுக்கு இந்த ஆண்டின் 75 சதவிகித நாட்களை வழங்கி உள்ளது.
`எரிவாயு பயன்பாடு`
அதே நேரம், பிரிட்டன் தனது மின்சாரத் தேவைக்காக எரிவாயுவை சார்ந்து இருப்பதையும், அதன் பயன்பாட்டையும் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று `மைகிரிட்-ஜிபி` என்ற அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
அந்த அமைப்பைச் சார்ந்த அண்ட்ரூ, “பிரிட்டன் தன் நிலக்கரி தேவையை குறைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துகிறது. இப்போது, 7 சதவிகித மின்சாரம் மட்டுமே நிலக்கரியை கொண்டு தயாரிக்கப்படுகிறது.”
மேலும் அவர், “பிரிட்டன் தம் எரிவாயு பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். இதே அளவில் அந்த நாடு எரிவாயுவை பயன்படுத்தினால், பிரிட்டன் சர்வதேச சந்தையின் எரிவாயு விலை மாற்றங்களால் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மூலம் – பிபிசி