குளோபல் தமிழ்ச்செய்திகளின் அலுவலக செய்தியாளர்….
கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி தீப்தி போகொல்லாகமவின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மனோ கணேசன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். காலணித்துவ ஆளுனர் ஒருவரின் மனைவியைப் போன்று தீப்தி செயற்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். திருகோணமலையில் இந்து பக்தர்களை தீப்தி கடந்த வாரம் தூற்றிய சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார். தீப்தியின் செயற்பாடு நாட்டின் சகவாழ்விற்கு குந்தகம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை உத்தியோகத்தர்கள் கூட பாதணிகளை கழற்றிவிட்டு கோயிலுக்கு பிரவேசித்துள்ளனர் எனவும், தீப்தி இந்து மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு அமைச்சர் பதவியையும் வேறு அமைச்சுப் பதவிகளையும் வகித்த றோகிதபோகொல்லாகம, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருந்தார். இவரது குடும்பத்தினர் மீதும், குறிப்பாக தீப்தி போகொல்லாகம மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவாகியிருந்தன. இந்த நிலையில் தேர்தலில் தோல்வியடைந்து மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரை நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் அரசியல் மேடையில் வீற்றிருக்கச்செய்து, கிழக்கின் ஆளுநராக நியமித்திருந்த நிலையில் மீண்டும் தீப்தி களமாடப் புறப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னர் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக கொழும்பின் பிரபல வைத்தியர் ஒருவரை தீப்தி தாக்கியிருந்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.