உலகிலேயே முதன் முறையாக இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் ரோபோ பொலிஸ் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. தற்காலத்தில் ரோபோ எனப்படும் இயந்திர மனிதனின் செயற்பாடு அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் முதன்முதலாக ஐதராபாத்தில் ‘ரோபோ’ பொலிஸ் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் வழிப்பறி, கொலை, கொள்ளை விபத்து போன்ற சம்பவங்கள் அதிக அளவில் இடம்பெறுவதனால் அவற்றை கண்காணித்து முறைப்பாடுகளை பதிவு செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ‘ரோபோ’ பொலிஸ் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட ரோபோவில் கமராக்கள் மற்றும் சென்சார் எனப்படும் உணர்வு கருவி பொருத்தப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் உள்ள நிறுவனம் ஒன்று தாய்லாந்து நிறுவனம் ஒன்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவினால் பல இடங்களுக்கு நகர்ந்து செல்ல முடியும்.
இது பொதுமக்கள் வழங்கும் முறைப்பாடுகளை பெற்றுக் கொண்டு பதிவு செய்வதுடன் அவர்களிடம் விசாரணை நடத்தும் எனவும் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவசர முறைப்பாடுகளை ‘ரோபோ’ பொலிஸ் மூலம் வீடியோ, ஓடியோ மற்றும் புகைப்படங்கள் ; மூலம் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைதினம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரோபோ வருகிற ஜூலை மாதம் பணியை ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது