தூய நாணயத்தாள்களை பயன்படுத்துவது தொடர்பான கொள்கையின் கீழ் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களுக்கு இவ்வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை மத்திய வங்கி தீர்மானித்திருந்தது.
இந்த நிலையில், மக்களிடமுள்ள அத்தகைய நாணயத் தாள்களை வர்த்தக வங்கிக் கிளைகளில் மாற்றிக்கொள்வதற்கு மேலும் சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் அந்த கால எல்லையை 2018 மார்ச் 31ஆம் திகதி வரை நீடிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ; மத்திய வங்கிக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தம்மிடம் சிதைக்கப்பட்ட நாணயத் தாள்கள் இருக்குமாயின் 2017 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அதிகாரமளிக்கப்பட்ட வர்த்தக வங்கிக் கிளைகளில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு ஏற்ப 2017 ஜுலை மாதம் முதல் அது தொடர்பாக மக்களுக்கு அறிவூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
நாணயத் தாள்களை அச்சிடுவதற்கு பெருந்தொகை பணத்தை அரசாங்கம் செலவிட வேண்டியுள்ள காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் செல்லுபடியாகும் நாணயத் தாள்களை வேண்டுமென்றே சிதைப்பவர்களுக்கு எதிராக 1949 ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்குவதற்கு சந்தர்ப்பம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது