குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் ஆரம்ப கால சிரேஸ்ட உறுப்பினர்களின் ஒன்று கூடல் இன்று ஞாயிற்றுக்கிழமை(21)மாலை வவுனியா மாவட்ட டெலோ அலுவலகத்தில் இடம் பெற்ற நிலையில் சிறி டெலோ கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக ஆயுத போராட்ட காலத்திலும்,அரசியல் களத்திலும் செயற்பட்ட தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் உறுப்பினர்களே இன்று இடம் பெற்ற குறித்த ஒன்று கூடலில் கலந்து கொண்டிருந்தனர்.
டெலோ கட்சியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்களான நித்தியானந்தம் மற்றும் செட்டி ஆகியோர் குறித்த ஒன்று கூடலுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது டெலோ கட்சியில் இருந்து பிரிந்து சென்று ஆரம்பிக்கப்பட்ட புதிய கட்சியான ‘சிறி டெலோ’ கட்சியில் இணைந்து கொண்டிருந்த அதன் தலைவர் சேனாதி, டெலோ கட்சியில் இருந்து விலகிச் சென்று சிறி டெலோ கட்சியுடன் இணைந்து செயற்பட்ட ஞானி,விச்சு,றிச்சி மாஸ்டர் உற்பட ஆரம்ப கால உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
டெலோ கட்சியினை வன்னியிலே முதன்மை இயக்கமாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கட்டி எழுப்பும் நோக்குடன் மாதாந்தம் ஒன்று கூடல்களை நடாத்துவது என குறித்த கூட்டத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட அதிகமான கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இலங்கை,இந்திய ஒப்பந்தத்தின் போது பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சந்திப்பானது டெலோ கட்சியின் ஆரம்ப கால சிரேஸ்ட உறுப்பினர்களின் ஒன்று கூடலாக காணப்பட்ட போதும், அவசரமாகவும், இரகசியமாகவும், சிறி டெலோ கட்சியின் முக்கியஸ்தர்களை இணைத்துக் கொண்டு கூட்டப்பட்டதன் பின்னனி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.