அமைச்சர்களுக்கு எதிரான ஊழல முறைப்பாடுகள் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கறுப்புப் பணம் எவ்வளவு என்ற தகவல்களை வெளியிட இந்திய பிரதமர் அலுவலகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் ஆணையாளர் ராதா கிருஷ்ண மாத்தூர் தெரிவித்துள்ளார்.
இந்திய வனப்பணி அதிகாரியான சஞ்சீவ் சதுர்வேதி, தகவல் அறியும்உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகள் எழுப்பி பிரதமர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்ததிருந்தார்.
அதில், பதவியில் உள்ள மத்திய அமைச்சர்களில் யார் யார் மீது பிரதமர் அலுவலகத்துக்கு ஊழல் முறைப்பாடுகள் வந்துள்ளன எனவும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணத்தில் எவ்வளவு மீட்கப்பட்டது எனவும் மக்களின் வங்கிக் கணக்குகளில் எவ்வளவு பணம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த ஊழல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன எனவும் கேள்விகள் எழுப்பியிருந்தார்.
இந்தநிலையில் சதுர்வேதியின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கறுப்புப் பணம் தொடர்பான கேள்விகள், ‘தகவல்’ என்ற வரையறைக்குள் வரவில்லை என பிரதமர் அலுவலகம் பதில் அளித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தகவல் ஆணையகத்தில் சதுர்வேதி மேல்முறையீடு செய்துள்ளநிலையில் அதுகுறித்து விளக்கமளித்த போதே தகவல் ஆணையாளர் ராதா கிருஷ்ண மாத்தூர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.