இலங்கை இராணுவ அதிகாரி கலன அமுனுபுரவை மாலியிலிருந்து திருப்பியனுப்புவதற்கு ஐநா தீர்மானித்துள்ளமைக்கு சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மீன் சூகா வரவேற்பு தெரிவித்துள்ளார்.இலங்கை இராணுவ அதிகாரி குறித்த விவகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐநாவின் இந்த செயற்பாட்டை வரவேற்றுள்ள அவர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்றோ ஒரு நாள் தங்களிற்கு நீதி கிடைக்கும் என்ற சிறிய நம்பிக்கையை இது ஏற்படுத்தும் எனவும் அவர் தன்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இராணுவ அதிகாரி அமுனுபுர தொடர்பாக தாங்கள் அமைதிப்படை தொடர்பான திணைக்களத்திற்கு சமர்ப்பித்த ஆவணங்கள் ஐநா இராணுவ அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளமை குறித்து மகழ்வடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2009 யுத்தத்தில் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இன்னமும் தெரியாத நிலை காணப்படுகின்றதாக தெரிவித்த அவர் அதற்காக இதுவரை எவரும் பொறுப்புக்கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆத்துடன் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்கள் இனிமேலும் ஐநாவின் கௌரவாமான பதவிகளை வகிக்க முடியாது என்ற வலுவான செய்தியை இந்த நடவடிக்கை தெரிவிக்கின்றது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் தெரிவித்துள்ள யஸ்மின் சூக்கா யுத்தகுற்றவாளிகள் எதிர்காலத்தில் ஐநாவின் கடுமையான கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது என்ற செய்தியையும் இந்த நடவடிக்கை தெரிவிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2009 இல் இடம்பெற்றவைகளில் இருந்து தான் விடுவிக்கப்பட்டுள்ளதாக நாடகமாடுவதற்காக ஐநாவின் அமைதிப்படை நடவடிக்கைகளை இலங்கை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மூன்று வருடங்களிற்கு முன்னர் இலங்கை ஐநா மனித உரிமை பேரவையில் தீர்மானமொன்றிற்கு இணை அனுசரனை வழங்கியதுடன் கலப்பு நீதிமன்றமொன்றை உருவாக்குவதாகவும்,பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளை யுத்த குற்றங்களிற்காக விசாரணை செய்வதாகவும் வாக்குறுதி வழங்கியது என தெரிவித்துள்ள யஸ்மின் சூக்கா இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை இன்னமும் நிறைவேற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
2009 இல் அமுனுபுரவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சவீந்திர டி சில்வா தற்போது இலங்கை இராணுவத்தின் மனித உரிமை விவகாரங்களி;ற்கு பொறுப்பாக செயற்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும் தெரிவித்துள்ள யஸ்மின் சூக்கா இவரே படையினர் வெளிநாடுகளில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் அது குறித்து விசாரணை செய்கின்றார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.