176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஒரு கோடியே 74 இலட்சம் ரூபா நிதியை மோசடி செய்த குற்றத்துக்கு அந்தச் சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தின் முன்னாள் கணக்காளருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று திங்கட்கிழமை தீர்ப்பளித்தார்.
குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு 15 ஆண்டுகளின் பின் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தின் முன்னாள் கணக்காளருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளி மோசடி செய்த தொகையின் 3 மடங்கான 5 கோடியே 22 இலட்சம் ரூபா அரச பணத்தை நீர் வழங்கல் அதிகார சபைக்கு இழப்பீடாக வழங்கவேண்டும். அதனை குற்றவாளியிடமிருந்து அறவிடுவதற்காக அவர் குற்றம்புரிந்த காலப்பகுதியிலிருந்து அவரது பெயரிலுள்ள அசையும், அசையா சொத்துக்கள் அத்தனையும் பறிமுதல் செய்து, அவற்றை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யவேண்டும்.
அந்தச் சொத்துக்கள் வேறொருவருடைய பெயருக்கு மாற்றப்பட்டிருந்தாலும் அவற்றையும் பறிமுதல் செய்யவேண்டும். பகிரங்க ஏலத்தால் கிடைக்கும் பணத்தின் மீதித் தொகையை குற்றவாளி செலுத்தவேண்டும். தவறின் அதன் பெறுமதிக்கு ஏற்ற வகையில் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்.
இழப்பீட்டுப் பணத்தை முழுமையாக செலுத்த அல்லது அறவிட முடியாதுவிடின் குற்றவாளி மேலும் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.
கடந்த 2003ஆம் ஆண்டு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் ஒரு கோடியே 72 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டமை உள்ளகக் கணக்காய்வில் கண்டறியப்பட்டது. அதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அந்த அலுவலகத்தின் கணக்காளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.
நீதிவான் நீதிமன்றால் சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சுருக்கமுறையற்ற விசாரணைகளின் பின்னர் வழக்கு சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.அரச நிதியைக் கையாடியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து திருகோணமலை மேல் நீதிமன்றில் எதிரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படாமல் தலைமறைவாகியிருந்தார்.
இதனால் சந்தேகநபரைக் கைது செய்து திருகோணமலை மேல் நீதிமன்றில் முற்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பிடியாணைக் கட்டளை வழங்கப்பட்டது. அந்நிலையில் சந்தேகநபர் மேல் நீதிமன்றில் சரணடைந்தார்.
அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தீர்ப்பை வழங்கியது.
இந்த வழக்கை வழக்குத் தொடுனர் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிஸ்டார் ஜெனரல் ரி.குமார்ரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.
Spread the love