அடுத்துவரும் மாகாண சபைத் தேர்தலில் மத மாற்றத் தடைக்கான நிலைச் சட்டத்தை இயற்றும் மாகாண சபையைத் தெரியுமாறு மறவன்புலவு கே.சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபை காலம் நிறைவுறும் நிலையில் தனது கருத்தினை மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இந்த மண்ணின் நெடிய வரலாற்றினூடாகத் தமிழ்த் தேசியத்தைப் பேணிக் காக்கும் சைவ சமையர்களை அழைக்கிறேன். 5,000 ஆண்டுகளுக்கு மேலாகச் செதுக்கித் திருத்தி வந்த நாகரிக வளர்ச்சிசார் தமிழர் மரபுகள், வழமைகள், பழக்க வழக்கங்கள், இலக்கியங்கள், இசை, நாட்டிய, நாடக, ஓவிய, சிற்பக் கலைகள், கோயில் கட்டடக் கலை, நுண் கலைகள், காலக் கணிதம், வானியல், மருத்துவம், அறிவியல் தொழிநுட்பப் புலமைகள், இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல சட்டம் ஒழுங்குசார் ஆட்சித் திறன், யாவற்றையும் நம் தலைமுறையில் காக்கவும் பேணவும் எழுகின்ற தலைமுறைகளுக்குக் கொடுக்கவும் மத மாற்றத் தடைக்கான நிலைச் சட்டத்தை வட மாகாண சபை இயற்றுவதே நன்று.
நேற்று மேற்கு மாகாணம், இன்று கி்ழக்கு மாகாணம் எனத் தமிழர் இழந்து வருவது போல நாளை வடக்கு மாகாணத்தையும் தமிழர் இழக்காமல் காக்க, கடந்த 400 ஆண்டுகால மதமாற்றக் கொடுமையைத் தடுக்க, மத மாற்றத் தடைக்கான நிலைச் சட்டத்தை இயற்ற ஆதரவு, ஊக்கம் தரும் வேட்பாளர்களையே தமிழ் மக்கள் மாகாண சபைக்குத் தேர்ந்து அனுப்ப வேண்டும் என கேட்டக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.