கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில், இருவரைக் கடத்திச் சென்று காணாமலாக்கப்பட்டமை தொடர்பில், கைதுசெய்யப்பட்ட கடற்படையின் லெப்டினன்ட் கெமாண்டர் கே.ஏ தயானந்தவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட அவர், கொழும்பு மேலதிக நீதவான் கேசர சமரதிவாகர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே மேலதிக நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
நகர சபை ஊழியர்களான வடிவேலு லோகநாதன் மற்றும் ரத்னசாமி பரமானந்தன் ஆகிய இருவர் 2009ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த இருவரும் காணாமல் ஆக்கப்பட்ட போது, சம்பூர் கடற்படை முகாமில், புலனாய்வு அதிகாரியாக லெப்டினன்ட் கெமாண்டர் கே.ஏ தயானந்த பணியாற்றி இருந்தார்.
இந்தக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், கைதுசெய்யப்பட்ட மற்றொரு சந்தேகநபரான லெப்டினன்ட் கெமாண்டர் அனில் மாபா, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது