சென்னை கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி தனது 82ஆவது வயதில், காலமானார். கூத்துப்பட்டறை என்ற மேடை நாடகக் குழு மற்றும் நவீன நாடகப் பயிற்சிப் பள்ளியை உருவாக்கிய நாடக ஆசிரியர் ந. முத்துச்சாமி 1997 ஆம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கினார்.
கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற நடிகர்கள் பலர் தமிழ்த் திரைப்படத்துறையிலும் புகழ் பெற்றுள்ளனர். அவர்களில் விஜய் சேதுபதி, பசுபதி, விமல், குரு சோமசுந்தரம்,கலைராணி, இளங்கோ குமரவேல் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புஞ்சை என்ற கிராமத்தில் மே 25, 1936 இல் பிறந்த ந.முத்துசாமி 2000 ஆண்டின் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களுள் இவரும் ஒருவர்.
இவரது “கூத்துப்பட்டறை” என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. “கசடதபற”, “நடை” போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நீர்மை உட்பட 5 நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவர் எழுதிய “ந. முத்துசாமி கட்டுரைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் இவரது கலைச்சேவையை பாராட்டும் வண்ணம் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமை படுத்தியுள்ளது
நீர்மை என்ற சிறுகதைத் தொகுப்புடன் காலம் காலமாக, அப்பாவும் பிள்ளையும், நாற்காலிக்காரர், சுவரொட்டிகள், படுகளம், உந்திச்சுழி, கட்டியக்காரன், நற்றுணையப்பன் போன்ற நாடகங்களையும் அன்று பூட்டியவண்டி என்ற தெருக்கூத்துக் கலை பற்றிய கட்டுரை புத்தகத்தையும் இவர் எழுதியுள்ளார்.