வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக, முகப்புத்தக நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையகம் ; 5 லட்சம் பவுண்ஸ்களை அபராதம் விதித்துள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக முகப்புத்தக நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம் முகப்புத்தக பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக முகப்புத்தக நிறுவனத்தின் மீது இங்கிலாந்து தகவல் ஆணையகத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையகம் 5 லட்சம் பவுண்ஸ்களை அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
முகப்புத்தகத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு செயல்களின் மூலமாக சேகரிக்கப்படும் தகவல்களானது, பயனாளர்களின் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தபட்டுள்ளது. இதன்மூலம் பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து முகப்புத்தக நிறுவனம் தவறியுள்ளது.
இந்த விவகாரம் பெரும் சர்சையை ஏற்படுத்திய பின்னரும் 2018-ஆம் ஆண்டுவரை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் மூல நிறுவனமான எஸ்.சி.எல் நிறுவனம் முகப்புத்தக தளத்திலிருந்து நீக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது என இங்கிலாந்து தகவல் ஆணையகம் தெரிவித்துள்ளது