இலங்கையின் அரசியலில் திடீர் மாற்றமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றதுடன் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி ஊடாக அறிவித்திருந்தார். இந் நிலையில் மகிந்த ராஜபக்ச இன்று பிரதமராக கடமையை பெறுப்பேற்றுக் கொண்டார்.
இதேவேளை உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் சபாநாயகர் கருஜெயசூரியவுக்கு இன்று 126 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கியுள்ளனர். இதில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
இதேவேளை பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியை கைப்பற்றும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட பத்திரிகையாளர்களை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க தற்போது நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இழைத்தது பாரதூரமான குற்றம் – ரணில்
நாடாளுமன்றத்தை கூட்ட ஜனாதிபதி அனுமதிக்காதமை அரசமைப்புக்கு முரணானது என்றும் இவ்வாறு தெரிவித்தமை பாரதூரமான குற்றம் என்றும் கூறியுள்ள ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அனைத்தையும் குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்னமும் நாடாளுமன்றில் தாம் பெரும்பான்மையை கொண்டிருக்கும் பிரதமராக உள்ளதாக தெரவித்த அவர் 19 ஆவது திருத்தத்திற்கு அமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும் அவரால் பிரதமரை பதவிநீக்க முடியாது என்றும் கூறினார்.
இந்த நாட்டில் உள்ள மோசடிகள், லஞ்சம், ஊழல் போன்ற சமூக விரோத செயற்பாடுகளை அழிப்பதற்கு 2015 ஜனவரி 8ஆம் திகதி அனைவரும் ஒன்றிணைந்து மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தாக குறிப்பிட்ட ரணில், தற்போது நடைபெறும் சம்பவங்கள் இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத சட்டவிரோத, நீதி விரோத செயற்பாடு என்றும் கூறினார்.
இதேவேளை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவரே நாட்டின் பிரதமர் என அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காத ஒருவரை பிரதமாரக மைத்திரிபால சிறிசேன நியமித்திருப்பது வெட்கப்பட வேண்டியது என்றும் தெரிவித்தார். அத்துடன் தாம் செய்த இந்த தவறை மறைப்பதற்காக சிறு பிள்ளைகள் கூட நம்பாத கதைகளை தற்போது கூறுவதாகவும் ரணில் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தை கூட்டுமாறே கட்சிகளும் சர்வதேசமும் வலியுறுத்துகின்றது! மங்கள
நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டமாறு ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய மூன்றுப் பிரதானக் கட்சிகளும் சபாநாயகரிடத்தில் உத்தியயோகபூர்வமாக கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இதையே சர்வதேச நாடுகளும் வலியுறுத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
எனினும் இதனை மேற்கொள்ளாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொடர்ச்சியாக அரசியலமைப்பிற்கு முரணாகவே செயற்பட்டுக்கொண்டிருப்பதாகவும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையை அரசமைப்புக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் என்றும் கூறினார். இதனை நாடாளுமன்றில் மட்டுமே தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனை வலியுறுத்துவதற்காகத் நாளை கொழும்பில், பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நாம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த மங்கள்,
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்கவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள்ளவோ இந்த செயற்பாட்டை மேற்கொள்ளவில்லை என்றும் கூறினார்.
மஹிந்த தரப்பினர் இப்போதே ஊடாக அடக்குமுறையை ஆரம்பித்து விட்டதாகவும் இதற்கெதிராகத்தான் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சிக்கு வாக்களித்த அனைத்து மக்களையும் நாளை ஒன்றிணையுமாறு அழைப்பதாகவும் மங்கள குறிப்பிட்டார்.
நிச்சயமாக நாடாளுமன்றில் தமது பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் இதனைத் தொடர்ந்து இவ்வாறான சட்டவிரோதமான அரசமைப்புக்கு முரணாக செயற்பட்ட அனைவருக்கு எதிராகவும் நாம் நடவடிக்கை எடுப்போம் என்றும் மங்கள சமரவீர மேலும் கூறினார்.