குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்ற நிலைமையிலும் வடக்கில் முப்படை மற்றும் காவல்துறையினர் வசமிருக்கும் பொது மக்களின் நிலங்களை விடுவிக்கும் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டுமென ஐனாதிபதி மைத்திரிபால கூறியுள்ளமை நல்ல விடயமென வரவேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கமும் இந்த நடவடிக்கைகளுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளளார்.
யாழ் மாவட்டச் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் மாவட்டத்தில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பது சம்மந்தமான கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் முப்படைகளின் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் காணித் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இக் கலந்துரையாடலின் முடிவில், மாவை சேனாதிராசா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
முப்படைகளின் வசமிருக்கும் பொது மக்களின் காணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்பட வேண்டுமென்று ஐனாதிபதி தெரிவித்திருந்தார்.
அதற்கமைய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநருக்கும் படைத் தளபதிகளுக்கும் அறிவித்திருந்தார். இதனடிப்படையில் ஆளுநர் தலைமையில், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் கூட்டங்களும் நடைபெற்றுள்ளன.
இந் நிலையில் யாழ் மாவட்டச் செயலகத்திலும் இதற்கான கூட்டமொன்று நடைபெற்றது. இதன் போது முப்படைகள் மற்றும் n காவல்துறையினர்; வசமுள்ள பொது மக்களின் காணிகள் மற்றும் அதனை விடுவிப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விடுவிப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
இதன் போது இரானுவத்தினர் வசமுள்ள காணிகள் சிலவற்றை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அதே நேரம் இரானுவத்தின் வசமுள்ள ஏனைய காணிகளை விடுவித்து அவர்கள் மாற்று இடங்களுக்கு நகர்வதற்கு நிதி வேண்டுமெனக் கோரியுள்ளனர்.
அதே போன்று காவல்துறையினரும் தம் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நிதி தேவை எனக் கேட்டுள்ளனர். ஆகவே இந்த விடயங்கள் தொடர்பில் ஐனாதிபதியினதும் அரசினதும் கவனத்திற்கு கொண்டு சென்று நிதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்திருக்கின்றார்.
அதற்கமைய காணிகள் விடுவிக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறு காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கைகள் இங்கு எடுக்கப்பட்டு வருகின்ற அதே நேரத்தில் உயர் மட்டக் கலந்துரையாடல்களும் நடைபெற்று வந்திருந்திருந்தன.
ஆனால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமைகளால் இந்த விடயங்கள் தொடர்பில் கேள்விகளும் எழுந்திருந்தன.
ஆனாலும் நாட்டில் அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டிருந்தாலும் தாம் வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய பொது மக்களின் காணிகளை அவர்களிடமே கையளிக்கும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஆளுநருக்குத் தெரிவித்திருப்பதாக இக் கூட்டத்தின் போது ஆளுநர் கூறியிருக்கின்றார்.
அவ்வாறு ஐனாதிபதி கூறியிருக்கின்றமை நல்லதொரு விடயம். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அதே நேரம் தொடர்ந்தும் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கத் தரப்பினர்களும் ஐனாதிபதியின் இவ் அறிவுறுத்தலுக்கமைய நிலங்கள் விடுவிக்கப்படுவதற்குரிய ஒத்துழைப்புக்களையும் ஆதரவையும் வழங்க வேண்டுமென்றும் நாம் அவர்களிடத்தே கேட்டுக் கொள்கின்றோம் என மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்தார்.