கொழும்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். விஜேராமவில் உள்ள மகிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ள இந்த சந்திப்பில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கலந்துகொண்டார்.
இதே வேளை இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர் எம்.ஏ சுமந்திரன் செல்லாது, பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உறவினரும், முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஸவின் கணவருமான திருக்குமார் நடேசனின் உறவினர் சண்முகநாதன் ஏன் உடன் இருந்தார் என்ற கேள்விகள் கொழும்பின் அரசியல் வட்டாரங்களில் கேள்வியை உருவாக்கி உள்ளது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு மிகவும் அவசியம் என சம்பந்தனிடம் மகிந்த கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
எனினும் கூட்டமைப்பின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவேன் என நீங்கள் எழுத்துமூலம் கோரிக்கை தந்தால் மட்டுமே உங்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பரிசீலிப்போம் என சம்பந்தன் பதிலளித்துவிட்டு வெளியேறினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஆதரவு வழங்காவிடின் குறைந்த பட்சம் நடுநிலமை வகிக்குமாறு கோரப்பட்டதாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று விசேட கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இ தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து பேசப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.