மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா சிங் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோகித் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக மும்பை என்ஐஏ நீதிமன்றத்தில் நேற்றையதினம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2008-ம் ஆண்டில் ஒரு மசூதிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இந்த வழக்கை மாநில தீவிரவாதத் தடுப்புப் படையினர் விசாரித்து வந்தநிலையில் கடந்த ஆண்டு இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா சிங், முன்னாள் லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக மும்பையில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழும் சதித் திட்டம் மற்றும் கொலையில் ஈடுபட்டதாக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும் இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப் பட்டுள்ளதையடுத்து வழக்கின் விசாரணை எதிர்வரும் 2-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது