திருப்பதியில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. திருப்பதியில் கடந்த 2-ம் திகதி காந்தி ஜெயந்தி நாள் முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு நகராட்சி தடை விதித்திருந்தது. 50 மைக்கிரோனுக்கும் கீழ் உள்ள பிளாஸ்டிக் உறைகள் , 2 லீட்டருக்கும் குறைவான குடிநீர் போத்தல்கள் தேனீர், கோப்பி அருந்த பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கிண்ணங்கள்;, பிளாஸ்டிக் பூச்சு கொண்ட பேப்பர் கிண்ணங்கள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து திருப்பதி கோவிலிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்க கோரி திருப்பதி நகராட்சி அதிகாரிகள் தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிந்தநிலையில் நாளை முதல் திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது.
திருமலைக்கு வரும் பக்தர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்கள் பொருட்களை சோதனை செய்யும்போதே பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தப்படும் எனவும் அதனையும் மீறி கொண்டு வந்தால் 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாவரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.