வடக்கில் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தாழ்ந்து போகத் தொடங்கி இருக்கிறது. இதற்குரிய வலுவான காரணமாக வரட்சியைச் சொன்னாலும் மழை நீர்த் தேக்கங்களும், சேகரிப்பு இடங்களும் முறையாகப் பேணப்படாததையே ஆய்வாளர்கள் முதன்மைக்காரணியகளாகச் சுட்டிக் காட்டுகின்றனர்.பண்டைய மன்னர் காலத்தில் மழை நீர் சேகரிக்கக் கூடிய இடங்களைக் கண்டறிந்து அவை முறையாகப் பேணப்பட்டு வந்தன. அத்தகைய இடங்களுக்கு அருகில் குளங்களையும், ஏரிகளையும் அவர்கள் புதிதாக அமைத்தனர். ஏற்கனவே காணப்பட்ட குளங்களையும், ஏரிகளையும் பிற நீர்த்தேக்கங்களையும் தூர்ந்து போகாது பராமரித்தனர். தூர்வாரி இறைத்தனர். அனைத்தும் முறையாகப் பேணப்பட்டதனாலே மக்கள் நீருக்காக ஏங்காத நிலையொன்றை அவர்கள் கட்டிக் காத்திருந்தனர்.
நீர்வளம் குறைந்துகொண்டு போவதற்குரிய காரணிகளாக – நீண்ட காலமாக நீடித்த யுத்தச் சூழ்நிலையில் இவ்வாறான விடயங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்தத் தருணங்களில் இது போன்ற வளங்களைப் பற்றிச் சிந்திக்கவோ அது தொடர்பான விழிப்புணர்வுகளை முன்னெடுக்கவோ இயலாதவர்களாக அது சம்பந்தப் பட்டோர் இருந்திருக்கின்றனர். அடிக்கடி ஏற்பட்ட இடம்பெயர்வுகளும் இப்படிப்பட்ட விடயங்களைச் சிந்திக்க இடம் கொடுக்கவில்லை – என்பனவற்றை அத்துறைசார்ந்தவர்கள் முன்வைக்கின்றனர்.
ஆனால், தற்போது பொறுப்பற்ற முறையில் ஏற்படுத்தப்படுகின்ற குடியேற்றத் திட்டங்களும் அதற்காக நடைபெறுகின்ற காடு அழிப்புகளையும் பிறிதொரு காரணமாகவும் சொல்லுகின்றனர். இதில் நாடு பற்றியோ வளம் பற்றியோ இயற்கைச் சம நிலை பற்றியோ அரசியலளார்கள் சிந்திக்க மறுக்கின்றனர். இயற்கையை அழித்துவிட் டு அதன் முக்கியத்தை உணராது செய்யப்படுகின்ற அபிவிருத்திகள் எமக்கு அவசியமானதா ? என்ற கேள்வியும் எம்முள் எழுகிறது. பின்பு அதனைச் செயற்கையாக உருவாக்கலாம் என்ற கற்பனை எத்துணை சாத்தியம்? என்பதுவும் கேள்விக்குரியதொரு விடயமெனலாம். அதோடு நிலத்தடி நீர் பற்றிய முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தாததனால் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படுகின்ற குழாய் கிணறுகள் தோண்டும் நடவடிக்கைகள் வட பகுதியில் அதிகரித்து வருகின்றன. முன்பெல்லாம் 20-30அடியில் கிடைத்த நீர்மட்டத்தைத் தற்போது குளாய்கிணறுகளைத் தோண்டுகின்ற தனியார் நிறுவனங்கள் 60அடிவரை கொண்டு சென்றுவிட்டிருக்கிறார்கள். சில இடங்களில் அதற்கு மேலாகவும் தோண்டப்பட்ட கிணறுகளும் உண்டு. நிலத்தடி நீர் பற்றி ஆய்வு செய்கின்ற ஒருவரை நான் எதேச்சையாகச் சந்தித்த பொழுது அவர் நீர்நிலைகள் பற்றிச் சொன்ன விடயம் எம்மைப் பலவாறு சிந்திக்க வைத்தது.
அவர் கூற்றுப்படி பல நூற்றுக் கணக்கான குளங்களும், ஏரிகளும் இருந்த அடையாளமே தெரியாதவாறு மாற்றப்பட்டிருக்கிறது. இன்னும் பல இடங்கள் தனியாரினாலும் ஒரு குறிப்பிட்ட சமூகங்களினாலும் அபகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை அவர்கள் தமதாக்கிக் கொண்டு அதில் கட்டடங்கள் கட்டியும் மற்றும் தமது சொந்தப் பாவனைக்குரிய இடமாகவும் மாற்றிக் கொண்டிருக்கின்றனர் பல குளங்கள் பராமரிப்பில்லாது போய் மண் மேடாகக் காட்சி அழிக்கின்றன. அப்படிப்பட்ட பல குளங்கள் தூர்வராது மாசடைந்து போய்க் கிடக்கிறதாகவும் அவர் சொன்னார். அவற்றுள் இந்து ஆலயங்களை அண்மித்தும் அவற்றிற்குரியன வாகவும் இருக்கின்ற பெரும்பாலான நீர்நிலைகள் அவற்றின் சிறப்பறிந்தும், பொறுப்பறிந்தும் முறையாகப் பேணப்படாததற்கு அந்தந்தக் கோயில் நிர்வாகங்களே முட்டுக்கட்டையாக இருக்கின்றன. ஏனெனில் அத்தகைய நிர்வாகத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் இது பற்றிய விழிப்புணர்வு அற்றவர்களாகவே இருப்பதைக் காணலாம். கோயில் நிர்வாகங்களில் மாத்திரமல்ல பல சமூக நிறுவனங்களில் பொறுப்பாக இருக்கின்றவர்கள் பலர் சமூகப் பொறுப்பு என்ன வென்பதில் அதிக விளக்கம் அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். பெரும்பாலும் அன்றைய காலப்பகுதியில் கிராமத்துக்கு ஒரு குளம் என இருந்திருக்கிறது. அவற்றில் பல காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. அதற்கு உதாரணமாக மருதடி விநாயகர் ஆலயத்தை சொல்லலாம். கோயில் அபிவிருத்தி என்ற பெயரில் கோயிலுக்கு தென் கிழக்காகக் காணப்பட்ட குளம் மூடப்பட்டுச் சம தளமாகக் காணப்படுகிறது. இன்னும் சில நாட்களில் அது வயல்வெளிக்கொப்பானதாக மாறிவிடும். அத்துடன் இது பற்றி மக்கள் அக்கறைப்படாத இன்னொரு கிராமமாக இணுவிலைச் சொல்லலாம். இணுவில் என்ற பெயரே அங்கு காணப்பட்ட இரு குளங்களின் அடிப்படையில் எழுந்ததாக ஒரு கதை உண்டு. அங்கு தற்போது எஞ்சியிருக்கின்ற பெரியவர்களைக் கேட்டால் அதன் சரித்திரத்தைச் சொல்லுவர். அதாவது இணை + வில் = இணுவில் என இரு குளங்கள் இணைந்திருந்தத னாலேயே அந்தப் பெயர் உண்டானதாக அறியக் கிடக்கிறது. தற்போது அங்கே அந்தக் குளங்களுக்குரிய நிலங்கள் தனியாரினாலும் சமூக அமைப்புகளாலும் பொது நிறுவனங்களினாலும் உரிமை கொண்டாடப்பட்ட நிலையில் அங்கு குளங்கள் மறைந்து நிலத்தின் பெரும் பகுதி பாடசாலை ஒன்றிற்குரிய விளையாட்டு மைதானமாகக் காட்சியளிக்கிறது. அங்கு காணப்பட்ட நீர்த்தேக்கங்கள் அற்றுப்போனதால் தற்போது நிலத்தடி நீர் முன்பிருந்த நிலையில் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. அதேவேளை வேறு இடங்களிலுள்ள குளங்கள் அதன் பெறுமதி உணரப்பட்ட ஊர் மக்களால் சிரமதான அடிப்படையில் புனரமைக்கப்பட்டு சீர்திருத்தப்பட்டிருக்கிறது என்ற செய்திகளும் எமது காதுகளில் எட்டப்பட்டிருக்கின்றன.
அப்படி நீண்டகாலம் பராமரிப்பற்று கழி நிலமாகக் காணப்பட்ட நுணாவில் குளம் தற்போது பல லட்ச ரூபா செலவில் தொண்டு நிறுவனமொன்றினால் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டிருக்கிறதென்ற செய்தி கேட்டு அங்கு சென்றோம். ஏ- 9 பாதையில் இருந்து வட புறமாக ஏறத்தாழ கால் கிலோமீற்றர் தொலைவில் நுணாவில் முருகன் கோவில் மற்றும் கண்ணகை அம்மன் கோவிலோடு இணைந்திருக்கிறது அந்தக் குளம். பண்டைய நாட்களில் கோயில் செயற்பாடுகள் எல்லாம் மக்கள் நலன்களை மையப்படுத்தியே முன்னெடுக்கப்பட்ட தென்பதற்கு இதுவும் ஒரு முன்னுதாரணமாகும். நாம் சென்ற அன்றைய தினம் (22.10.2018) நுணாவில் குளமும் அதை ஒட்டிச் செல்லுகின்ற தெருவும் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கும் வைபவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்கள் மகிழ்ச்சியோடு காணப்பட்டனர். அந்தக்குளத்தைப் புனரமைக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டதற்கான காரணம் என்ன வென்று நுணாவில் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரைக் கேட்டோம்.
அந்தப் பகுதியில் ஏற்பட்ட நீண்ட வரட்சியும் அதனால் இடைநிறுத்தப்பட்ட விவசாய நடவடிக்கைகளும், வேலையற்ற சூழ்நிலையும்,அருந்த நீரற்று உயிரைவிட்ட கால்நடைகளும் அந்த ஊர் மக்களைச் சிந்திக்கச் செய்திருக்கிறது. அத்தகைய சிந்தனையின் நீட்சியினாலேயே நுணாவில் குளத்தைப் புனரமைக்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே ஏற்பட்டதாக அவர் சொன்னார். இதற்காக அவர்கள் பலரை நாடி இருக்கின்றனர். முடிவில் அந்த ஊரைச் சேர்ந்த புலம் பெயர் தமிழர் ஒருவர் புனரமைப்பதற்கு ஒத்துக் கொண்டதனால் தற்போது அந்த அரும்பெரும் பணிகள் நடைபெற்று மக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டிருக்கிறது. இதை விட முக்கியமான விடயம் என்னவெனில் ஏ 9 பாதையிலிருந்து அந்தக் குளம் அமையப் பெற்ற இடத்துக்குச் செல்வதற்குரிய வீதியைப் புனரமைப்பதற்காக அகலிப்பொன்றை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அதற்காக மக்கள் தங்களுக்குச் சொந்தமான வயல் நிலங்களின் ஒரு பகுதியை எந்தவித எதிர்பார்ப்புமின்றி விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.
அந்தக் குளத்தின் புனரமைப்புப் பணியைப் பிரித்தானியாவை மையமாகக் கொண்டு செயற்படும் யூரா (JURA) குழுமத்தின் அறக்கட்டளையான யூரா பவுண்டேசன் என்ற நிறுவனம் பொறுப்பேற்றுப் பல லட்சக் கணக்கான செலவில் பணி முற்றுப் பெற்றிருக்கிறது. அந்த நிறுவனத்தின் தலைவர் கணேசமூர்த்தி கபிலன் அவர்கள் இதை முன்னெடுத்திருக்கிறார். வெறும் புனரமைப்பாக இல்லாது அதற்குரிய சகல நியமங்கள் கடைப்பிடிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பையும் முன்னிறுத்திப் பல தொழில் நுட்பவியலாளர்களின் ஆலோசனைகளினால் அது புத்தாக்கம் பெற்றிருக்கிறது. அவர்கள் மேற் கொண்ட பணியின் சிறப்பு என்னவெனில் கோயிலும் குளமும் இரண்டுமே புனரமைக்கப்பட வேண்டியதாக இருந்தபோது அவர்கள் சமூகப் பொறுப்பையும் கோயில் என்றதன் அர்த்தத்தையும் முழுமையாக விளங்கிக் கொண்டு குளத்துக்கு முன்னுரிமை வழங்கியிருக்கின்றனர்.
மக்கள் சேவையே மகேசன் சேவையென உணர்ந்து இந்தப் பணியை முன்னெடுத்த கணேசமூர்த்தி கபிலன் அவர்களைச் சந்தித்து குளம் புனரமைக்க வேண்டும் என்று அவருக்கு உந்துதலை ஏற்ப்படுத்திய காரணிகள் பற்றிக் கேட்டோம். அந்த நிலப்பரப்பில் தான் கண்ட காட்சியொன்று தனக்குள் ஏற்ப்படுத்திய மன உறுத்தலினாலேயே தான் இப் பணியை முன்னெடுத்ததாகச் சொன்னார். அத்துடன் தனது தந்தையின் வற்புறுத்தலையும் ஊர் மக்களின் வேண்டு கோளையும் செவிசாய்ததே அந்தப் புனரமைப்புப் பணியை முன்னெடுத்ததாகவும் சொல்லி அந்த மன உறுத்தலை ஏற்படுத்திய சம்பவத்தை கபிலன் பின்வருமாறு விபரிக்கிறார்.
நுணாவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் வருடாவருடம் நடைபெறும் வரலஷ்மி பூசை எனது குடும்பத்தாருடையது. கடந்த வருடம் வந்தபோது பூசை முடிவடைந்து புறப்பட்ட சமயம் அங்கு கிணற்றடியைச் சுற்றிச் சில நால்நடைகள் வலம்வந்து கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்தபோது அவற்றின் கோலம் எனக்கு ஒரு செய்தியைச் சொல்லுவதாகக் கண்டேன். அத்தனையும் நலிவுற்றவையாகக் காணப்பட்டன. நான் கோவில் அர்ச்சகரிடம் அத பற்றிக் கேட்டேன்.அவற்றிற்கு அருந்த நீர் கிடைக்காததனாலேயே அலைந்து திரியிறதெனவும் அதற்காகவே கிணற்றை அடிக்கடி எட்டிப் பார்ப்பதாகவும் அது தொடர்பாக அங்கு காணப்பட்ட குளத்தையும் பற்றிச் சொன்னார். உடனடியாக அந்தக் கிணற்றருகே கால்நடைக்கென ஒரு தொட்டியைக் கட்டி அதில் என்றும் தண்ணீர் நிரம்பியிருப்பதாகப் பார்த்துக்கொண்டேன்.இதுவே ஆரம்பம். குளத்தைக் கட்டும்போது அந்தப் பணியின் சிறப்பை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் பின்னர் அதன் பெருமை பல வழிகளால் அறியப்பட்டபோது – ஏன் இன்னும் பல குளங்களை நான் இப்படிப் புனரமைக்கக் கூடாது?- என்ற எண்ணம் என்னுள் ஏற்பட்டிருக்கிறது. விரைவில் வேறு பல செயற் திட்டங்களையும் தொடங்கவிருக்கிறேன். – என்றார் கபிலன்.
மொத்தத்தில் நுணாவில் கிராமம் ஊர் கூடித் தேரை இழுத்திருக்கிறது. வடக்கில் இது போன்ற பல குளங்கள் புனரமைக்கப்பட வேண்டி இருக்கின்றது என்று அறிந்தோம். அந்தக் கிராமங்களில் அதற்குரிய வளவாளர்களும் இருக்கின்றனர். அந்தந்த இடத்தைச் சேர்ந்த பலர் புலம் பெயர்ந்தும் வாழ்கின்றனர். சர்வதேச ரீதியாகக அந்தந்தக் கிராமங்கள் சார்ந்து, பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள் சார்ந்து, கோயில்கள் சார்ந்து பல அமைப்புகள் உண்டு. அதைவிட அதற்கான நிதியைப் பெறுவதற்குரிய சூழ்நிலையும் அங்குண்டு.ஆனால் இது போன்ற விடயங்களில் முழுமையான விழிப்புணர்வு அவர்களிடம் இல்லாததைத்தான் குறையாகச் சொல்லுகிறார்கள். புலம்பெயர் வாழ் மக்களின் கவனமெல்லாம் இங்குள்ளவர்களால் வேறு வழிகளில் திசைதிருப்பப்படுவதாகச் சமூக ஆர்வலர் ஒருவர் சுட்டிக் காட்டினார். நிலத்தடிநீர் பற்றி நாம் சிந்திக்காது போனால், விழிப்படையாது போனால், விழிப்புணர்வை ஏற்படுத்தாது போனால் துயரம் நமக்கல்ல. இனிவரும் எமது எதிர்காலச் சந்ததியினருக்கே.சற்றுச் சிந்திப்பீர்களா?