உத்தரபிரதேச மாநிலத்தில் 42 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில், ஓய்வுபெற்ற காவல்துறையினர் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட் பகுதியில் 1987-ம் ஆண்டு இரு பிரிவினர் இடையே இடம்பெற்ற வகுப்பு கலவரத்தின் போது அங்குள்ள ஹாசிம்பூரா பகுதியை சேர்ந்த சிறுபான்மை சமூகத்தினர் 42 பேர், காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டபின் அவர்களின் உடல்கள், கால்வாயில் வீசப்பட்டன.
ஹாசிம்பூரா படுகொலை என அழைக்கப்படும் இந்தக் கொலைகள் தொடர்பாக19 காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கை டெல்லி திஸ்கஸாரி நீதிமன்றில் நடைபெற்று வந்தநிலையில் அவர்களில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில் 16 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்து விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் டெல்லி உயர்நீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் கீழ் நீதிமன்றின் தீர்ப்பை ரத்து செய்த டெல்லி உயர்நீதிமன்றம் குறித்த 16 காவல்துறையினருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து 16 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட காவல்துறையினர் அனைவரும் தற்போது பணியில் இருந்து ஓய்வுபெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது