பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் கொலையை அடுத்து சவூதி அரேபியாவுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்துவதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. ஜமாலின் மரணம் தொடர்பாக, பிரான்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா நாடுகள் சவூதிக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ஜெர்மனி கடந்த வாரம் ஆயுதம் ஏற்றுமதி செய்வது நிறுத்தப்படும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில் சுவிட்சர்லாந்து சவூதிக்கு ஆயுதம் வழங்குவது நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இதேவேளை ஆயுத ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் ஜமால் கொலை விசாரணைகளில் ஏற்படும் முன்னேற்றங்களைத் தொடந்து இந்த முடிவு திரும்ப பெறப்படலாமென சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்துறைக்கான செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் அந்நாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருபவரும் வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமான 59 வயதான ஜமால் கசோக்கி துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி தூதரக அலுவலகத்துக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த நிலையில் அவர் தூதரகத்தில் வைத்தே கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது