சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான கோவையின் மூன்று சரத்துகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் நுவான் சொய்ஸாவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபை கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளது.
சர்வதேசப் போட்டியொன்றை நிர்ணயம் செய்ய முயன்றமை அல்லது முடிவில் அல்லது வேறெந்த விடயங்களில் தவறான முறையில் தாக்கம் செலுத்த முயன்றமை, சக தொழில்முறையானவர்களை இவ்வாறு செயற்படுமாறு கோரியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நுவான் சொய்ஸா மீது சுமத்தப்பட்டுள்ளது. மேலும் 14 நாட்களுக்குள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சொய்ஸா பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
2015ஆம் ஆண்டு செப்டெம்பரிலிருந்து வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகவிருக்கும் நுவான் சொய்ஸா, அதற்கு முன்னர் இந்தியாவின் கோவா அணியின் பயிற்றுவிப்பாளராகவிருந்தார். கடந்த ஒரு மாதத்துக்குள் மோசடிக் குற்றச்சாட்டுக்குள்ளாகும் இலங்கையின் இரண்டாவது முன்னாள் வீரர் சொய்ஸா என்பது குறிப்பிடத்தக்கது.