சிறீலங்கா அரசாங்கத்தின் ஆட்சிப் பொறுப்பை யார் பொறுப்பேற்பது என்பது தொடர்பாக தென்னிலங்கையில் இரு பிரதான கட்சிகளுக்கிடையேயும்; கடும் போட்டி நிலவுகின்றது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பே வரலாற்றில் ஒரு போதும் இல்லாதவாறு தீர்மானிக்கும் சக்தியாக மேலெழுந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய நிபந்தனைகளுடன் மட்டும் இது விடயத்தில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் எழுத்து மூல உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோருகின்றோம். கால அட்டவணைகளை விதித்து அதன் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்ற உத்தரவாதத்தை பெறுமாறும் கோருகின்றோம்.
இவ்வாறு தமிழ் சட்டத்தரணிகள் பேரவை , தமிழ் சிவில் சமூக அமைப்பு , யாழ்.பல்கலைகழக ஊழியர் சங்கம், யாழ்.பல்கலை கழக மாணவர் ஒன்றியம் , யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் , சமூக விஞ்ஞான ஆய்வு மையம் , பசுமை எதிர்காலத்திற்கான நிலையம் , வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு ஆகிய எட்டு அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
குறித்த கோரிக்கைகள் வருமாறு
1) தேசம், இறைமை, சுயநிர்ணயம், சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படல் வேண்டும். அரசியல் யாப்பு வடிவம் வழங்கும் போது தமிழ் பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணக்கூடிய அதிகார அலகு, சுயாட்சி அதிகாரங்கள், கூட்டு அதிகாரத்தில் சமத்துவமான பங்கு, அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பவற்றிற்கு உத்தரவாதம் வழங்குதல் வேண்டும். அரசியல் தீர்வு வரும்வரை தமிழ் மக்கள் தங்கள் விவகாரங்களை தாங்களே பார்க்கக் கூடிய இடைகாகல நிர்வாகத்திற்கு ஒழுங்கு செய்தல் வேண்டும்.
2) பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.
3) தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்ற முயற்சிகள் நிறுத்தப் படுவதோடு மகாவலி குடியேற்ற திட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படல் வேண்டும்.
4) படையினரால் பறிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும்.
5) வனபரிபாலனத் திணைக்களம் தொல்பொருட் திணைக்களம் என்பவற்றின் அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
6) தமிழ்ப் பிரதேசங்களில் இடைக்கால நிர்வாகம், வடமாகாண சபை, உள்ளூராட்சி சபைகள் என்பவற்றினூடாக மட்டும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
7) தமிழ் பிரதேசங்களில் சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
8) மாவட்ட அரச செயலகங்களில் அதிகாரங்கள் மீளவும் மாகாண சபைகளிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.
9) வடமாகாண சபை முதலமைச்சர் நிதியம் உடனடியாக அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
10) கல்முனை தமிழ்ப்பிரதேச செயலர் பிரிவு உடனடியாக தரமுயர்த்தப்படல் வேண்டும்.