நாட்டின் அரசியல் நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடும் சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்துள்ளதாகவும் நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் அவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவர் சம்பந்தனின் தலமையில் சந்திப்பர் எனவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்களை பேசுவதற்காக ஐனாதிபதி எங்களை அழைக்கவில்லை என்பது தமக்கு தெரிந்தபோதும், கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை நேரடியாக தெரிவிப்பதற்காகவே ஐனாதிபதியுடனான சந்திப்பிற்குச் செல்லவுள்ளதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மகிந்த மற்றும் ரணில் என இரு தரப்பினரும் தமது கட்சியுடன் பேசி வருவதாகவும் மகிந்த தரப்பினர் கலந்துரையாடிய விடயங்களை பொது வெளியில் தெரிவித்தால் நாட்டில் பெரும் குழப்பங்களே ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எழுத்துமூல உத்தரவாதம் அளித்தால் மகிந்த தரப்பை கூட்டமைப்பு ஆதரிக்குமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த, சித்தார்த்தன், ஜனாதிபதி உறுதிமொழி வழங்குவார் என்ற ஊகத்தை மட்டும் வைத்துக் கொண்டு கூட்டமைப்பு சட்டத்திற்கு முரணான பிரதமர் நியமனத்தை எதிர்க்கும் என எடுத்திருக்கும் முடிவை மாற்றுவோம் என்று கூற முடியாது எனவும் அவ்வாறு ஊகங்களில் பதில்களைச் சொல்லுவோமானால் அரசியலில் அது பெரிய பிழையாக மாறிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை ஏன் உங்களுடைய பக்கம் இழுத்தீர்கள் என்று நேரில் கேட்க வேண்டிய தேவையும் கூட்டமைப்புக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.