கருஜெயசூரிய பாராளுமன்றத்தை குழப்ப முயற்சித்து வருகிறார் – நிமல் சிறிபால டி சில்வா…
சபாநாயகர் கருஜெயசூரிய பாராளுமன்றத்தை குழப்ப முயற்சித்து வருகின்றார் என சிவில் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், சபாநாயகரின் நடவடிக்கைகள் பாராளுமன்ற சம்பிரதாயம், நிலையியற் கட்டளை மற்றும் அரசியலமைப்புக்கு எதிராகவே காணப்படுகின்றது எனவும்
குறிப்பாக 14ஆம் திகதி பிரதமர் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு எவ்வத அதிகாரமும் இல்லை எனவும் மாறாக அன்றையதினம் வாக்கெடுப்பு நடத்துமாறு சபாநாயகரால் தெரிவிக்கப்டுமாக இருந்தால் அது சட்டவிரோத செயலாகும் எனவும் தெரிவித்துள்ள நிமால் சிறிபால டி சில்வா அவ்வாறு வாக்கெடுப்பு இடம்பெற்றாலும் அது செல்லுபடியற்றதாகவே கருதப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அன்றையதினம் அவர்கள் விரும்பினால் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவந்து சமர்ப்பிக்கலாம் எனவும் அது உள்வாங்கப்பட்டு 5 அல்லது 6தினங்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விசேட நீதிமன்றங்களை கலைப்பதே ஆட்சி மாற்றத்தின் முக்கிய நோக்கம் – அஜித் பெரேரா
மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் விசேட நீதிமன்றங்களை கலைப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்பெரேரா தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கருத்தின் மூலம் இது புலனாகின்றது எனவும்> நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சுசில் பிரேமஜயந்த விசேட நீதிமன்றங்களை கலைப்பதே தனது முதல் நடவடிக்கை எனTk; தெரிவித்துள்ளார் என அஜித் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்
இதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க ஏன் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது புலனாகியுள்ளது எனவும் குறிப்பிட்ட அஜித்பெரேரா தெரிவித்துள்ளார். விசாரணை செய்யப்பட்ட 120 கோப்புகள் குறித்து விசேட நீதிமன்றங்கள் விசாரணைகளை மேற்கொள்ளவிருந்தன என குறிப்பிட்டுள்ள அஜித் பெரோ இந்த விசாரணைகளை குழப்புவதே புதிய அரசாங்கத்தை அமைத்ததன் நோக்கம் என்பது அமைச்சரின் அறிக்கை மூலம் புலனாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவம்பர் 14 ம் திகதி ஓரிரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்படலாம் என தயாசிறிஜயசேகர தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள அஜித்பெரேரா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜனபெரமுனையும் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்தாவது பெரும்பான்மையை பெற முயல்வது புலனாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியலமைப்பிற்கு முரணானது – பைசர் முஸ்தபா..
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பிரதமரை நீக்க வேண்டும் எனின் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அதனைச் செய்ய முடியும். எனினும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு அரசியலமைப்பின்படி வரையறைகள் உள்ளன. பாராளுமன்றம் பிற்போடப்பட்டுள்ள போது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவது அரசியலமைப்பிற்கு முரணானதாகும் என விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
எனவே எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகின்ற போது நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற சபாநாயகரின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே சபாநாயகர் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததன் மூலம் அரசியலமைப்பின்படி அமைச்சரவைக்குரிய அங்கீகாரம் இழக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை இல்லாதவிடத்து பிரதமர் தானாகவே பதவியிழப்பார். அதேவேளை பாராளுமன்றத்தில் அதிகளவானோரின் நம்பிக்கையினை யார் பெற்றுள்ளதாக ஜனாதிபதி கருதுகின்றாரோ அவரைப் பிரதமராக நியமிப்பதற்கான அதிகாரம் உள்ளது. எனவே பிரதமர் நியமனம் அரசியலமைப்பிற்கு அமையவே இடம்பெற்றுள்ளது எனவும் குறிப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 14ஆம் திகதி, ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்கும் – பழனி திகாம்பரம்..
எதிர்வரும் 14ஆம் திகதி, ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் தான் மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்பது உறுதி என்றும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலைத் தொடர்பாக, மலையக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டமொன்று, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏற்பாட்டில், ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில், இன்று (9.11.18) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், புதிய பிரதமரொருவர் நியமிக்கப்பட்டமையை, தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கோடிக் கணக்கில் விலை பேசி அழைப்புகள் வந்தபோதும், தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள், ஜனாயக ரீதியில், நிதானமாக சிந்தித்து முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“கடந்த முன்று வருடங்களாக இல்லாத ஒருவர், திடீரென அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டு, பெயர்பலகைகளை மாற்றியுள்ளார். அவருக்கு பெயர்பலகைகளை மாத்திரம் மாற்ற முடியும். வேறு ஒன்றும் செய்யமுடியாது” எனத் தெரிவித்த திகாம்பரம், “இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்தவர், பகலில் ஒரு கட்சியிலிருந்துவிட்டு, இரவில் வேறு கட்சியில் அமைச்சராகினார். ஆனால் தமிழ் முற்போக்குக் கூட்டணி என்றுமே ஜனநாயகத்தை மதித்துச் செயற்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் மக்கள் ஆணையை மீறி, அமைச்சுப் பதவியை ஏற்றிருந்தால், நுவரெலியா மாவட்ட மக்கள் முன்னிலையில் இன்று நாம் வந்திருக்க முடியாது. நாங்கள் சிந்தித்து செயலாற்றியமையினாலேயே, அனைவரும் இன்று எம்மை வரவேற்கின்றனர். 2015ஆம் ஆண்டுக்கு பிறகு, நான் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் நான் வழங்கிய நியமனங்களை இரத்து செய்யுமாறு, தற்போது உள்ள புதிய அமைச்சர் கூறுகிறார். இவ்வாறான நடவடிக்கைகளைக் கண்டு, யாரும் பயப்பட வேண்டியத் தேவையில்லை. 15ஆம் திகதிக்குப் பிறகு, மீண்டும் நான் வருவேன்” எனத் தெரிவித்துள்ளார்.