திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா திப்பு ஜெயந்தியாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
தனது ஆட்சிக்காலத்தில் இந்துக்களை கொடுமைப்படுத்தி, கொடூரமாக கொன்றுகுவித்த திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவை சிறுபான்மையின மக்களின் வாக்குகளை கவரும் நோக்கத்தில் மாநில அரசு நடத்துவதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு நேற்று மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த எதிர்ப்பையும் மீறி இன்று திப்பு ஜெயந்தி விழா பலத்த பாதுகாப்புடன் கொண்டாடப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திப்பு ஜெயந்தி விழா கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
போராட்டக்குழுவினர் திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிராக கோசங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றதனையடுத்து அவர்களை காவல்துறையினர் ; கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது