ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நேற்றையதினம் பாராளுமன்றம் சட்ட விரோதமாகக் கலைக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அரசியலமைப்பு ஏற்பாடுகள் மிகத் தெளிவாக காணப்படுகின்றது எனவும் அதனை தவறாக அர்த்தப்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைப்பதனை உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையகமும் ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நாலரை ஆண்டுகளைக் கடப்பதற்கு முன்னர் அதனை ஜனாதிபதி கலைக்க முடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர் அதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்பதை 19 ஆவது திருத்தம் தெளிவாகக் கூறுகின்றது. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பான உத்தரவை தாம் நீதிமன்றத்தில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு சிறிது கால அவகாசம் தேவை எனத் தெரிவித்துள்ள சுமந்திரன் பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற முடியாமல் அல்லாடும் தரப்புகளுக்கு இந்தக் கால அவகாசம் ஒரு வாய்ப்பாக அமைந்து வீடும் எனவும் தெரிவித்துள்ளார்.