தற்போது காணப்படுகின்ற நிலைமைகளை கவனத்தில் கொண்டு அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரமே பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்துடன் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு சுமார் 500 கோடி ரூபா வரை தேவைப்படும் எனவும் எதுவாக இருந்தாலும் பொறுமையாக தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைகள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ள அவர் எனினும் சட்டத்திற்கமையவும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கும் அமையவே பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்த அவர் பொறுத்திருந்தூன் நிலைமைகளை பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
நேற்று நள்ளிரவு பாராளுமன்றைக் கலைத்த ஜனாதிபதி ஜனவரி 5ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இன்று தேர்தல்; ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி.பெரேரா, ராஜித சேனாராத்ன, கயந்த கருணாதிலக, சம்பிக ரணவக்க மற்றும் வஜிர அபேவர்தன உள்ளிட்டோரும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பான சட்டத்தரணிகள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.