வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதனையடுத்து அதற்கு கஜா புயல் என பெயரிடப்பட்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு திசையை நோக்கி நகரும் இந்த கஜா புயல் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 990 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இந்த புயல், 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது எனவும் அறிவித்துள்ளது.
மேலும் கஜா புயல் வர்தா புயல் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புயல் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று அந்தமான் கடல்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும், அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல்பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து பிறகு மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து 14ம் திகதி இரவு வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது