ராமர் கோயில் கட்டுவது குறித்து இந்துத்துவ அமைப்புகள் மற்றும் கட்சிகள் குரலெழுப்பி வரும் நிலையில், அயோத்தியில் புத்தர் சிலையை நிறுவ வேண்டுமென பாஜக பாராளுமன்ற உறுப்பினரான சாவித்திரிபாய் பூலே என்பவர் தெரிவித்துள்ளார்
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி – ராமர் கோயில் தொடர்பான பிரச்சினைக்குரிய நிலம் குறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அயோத்திக்கும் புத்தருக்குமான தொடர்பு குறித்து சாவித்திரிபாய் பூலே கருத்து வெளியிட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அயோத்தியின் பிரச்சினைக்குரிய இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், புத்தர் சம்பந்தப்பட்ட சில பொருட்கள் கிடைத்தன எனவும் அதனால் அந்த இடத்தில் புத்தரின் சிலையையும் நிறுவ வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த போது இதனைத் தெரிவித்த அவர் பாரதம் புத்தரைச் சார்ந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புவதாகவும் அதனால், அயோத்தி என்பது புத்தருக்கானது என்பதனால் இங்கு அவருடைய சிலையை நிறுவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.