உலகளாவிய ரீதியில் பெண்களின் கருவுறுதல் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக உலகிலுள்ள பாதி நாடுகள் தங்களது சராசரி மக்கள் தொகையை இழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும் அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவித்துள்ளன எனவும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் மிகப் பெரிய ஆச்சரியத்தினை அளிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக சமூகத்தில் பேரக்குழந்தைகளை விட அதிகளவிலான தாத்தா, பாட்டிகள் இருக்கும் சூழ்நிலை உருவாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் 1950 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான மக்கள் தொகை விகிதாசாரத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் லான்செட் என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
1950ஆம் ஆண்டுகளில் பெண்களுக்கு சராசரியாக 4.7 குழந்தைகள் இருந்தனர் எனவும் எனினும் கடந்த ஆண்டு பெண்களின் கருவுறுதல் விகிதம் வீழ்ச்சியடைந்து 2.4 குழந்தைகள் என்ற அளவை அடைந்துள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு பெண் தனது வாழ்நாளில் பெற்றெடுக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையே மொத்த கருவுறுதல் விகிதமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது