Home இலங்கை வடக்கு கிழக்கில் இருந்து அபகரித்துச்செல்லவே தெற்கிலிருந்து வருகின்றனர்

வடக்கு கிழக்கில் இருந்து அபகரித்துச்செல்லவே தெற்கிலிருந்து வருகின்றனர்

by admin

வடக்கு கிழக்கில் இருந்து எதனையாவது அபகரித்துச் செல்லவே தெற்கில் இருந்து வருவதாக வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். வட. மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மரநடுகையும் மலர்க் கண்காட்சியும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நேற்று வடக்கு முதல்வர் ஆற்றிய உரை

எமது தெற்கத்தைய மக்களை நான் வனாந்தரம் வாழ் மக்களாகக் கணிக்கவில்லை. ஆனால் தெற்கிலிருந்து இங்கு எம்மைப் பாதுகாப்பதற்கு என்று வருபவர்களின் மனோநிலை வேறுவிதமாக அமைந்திருப்பதை நான் கண்டுள்ளேன். வடக்கிலிருந்து, கிழக்கிலிருந்து எதனைச் சுருட்டிச் செல்லலாம் என்றே அவர்கள் மனோநிலை இருப்பதைக் கண்டுள்ளேன். எம்முட் சிலரும் சூழலைத் தமது சுரண்டலுக்குப் பாவிக்கவே நினைக்கின்றார்கள்.

நாம் இயற்கையின் ஒரு அங்கமே. அவ்வாறிருக்கையில் எம்மைச் சுற்றியுள்ளவற்றை அழித்தால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும். உதாரணத்திற்கு சுவரில் பதியும் நுளம்புகளைப் பல்லிகள் உண்கின்றன. பல்லிகள் எல்லாவற்றையும் அழித்தோமானால் நுளம்புகள் கணக்கின்றிப் பெருக நாம் வழிவகுப்பதாக அமையும். அது எம்மையே பாதிக்கும்.

இயற்கை சமநிலையை மனிதன் மாற்றியமைக்கப் பார்க்கின்றான். அண்மைக் காலங்களில் எமது பகுதிகளில் காணப்பட்ட பெரிய மரங்களும் விருட்சங்களும் வகைதொகையின்றி வெட்டி அழிக்கப்பட்டு வந்துள்ளன. அதன் காரணமாகத்தான் மழைவீழ்ச்சி சென்ற சில வருடங்களில் வெகுவாகக் குன்றிப் போய் விவசாயப் பயிர்ச்செய்கை மற்றும் உப உணவுப் பயிர்ச்செய்கை, மரக்கறி வகைகள் உற்பத்தி ஆகியன வீழ்ச்சி அடைந்தன.

போர்க்காலப் பசுமை அழிவு தொடர்ந்தும் நடைபெறுவதை நாம் விடலாகாது. மழைநீர் வர மரங்கள் அத்தியாவசியம் என்பதுடன் மரங்களே பல உயிரினங்களுக்கு வாழ்விடங்களுமாவன. அத்துடன், கரியமில வாயுவை உறிஞ்சி எடுப்பதற்கும் மரங்கள் அவசியம்.

நவீன இலத்திரனியல் கருவிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக எமது பகுதியில் காணப்பட்ட சிட்டுக்குருவி போன்ற பல சிறிய பறவையினங்கள் முற்றாக அழிந்து போயுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இது வருத்தத்திற்குரியது. இந்நிலை தொடருமானால் எதிர்காலத்தில் எமது குழந்தைகளின் மூளை வளர்ச்சிகூட பாதிப்படையும். தினமும் பல இலட்சக்கணக்கான நுண் அலைகள் குறுக்கும் நெடுக்குமாக எம் மத்தியில் பயணித்த வண்ணமாக உள்ளன. இவை குழந்தைகளின் மூளைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன.

வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் இந்த நுண்ணலைகளின் தாக்கங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு அந்த நாட்டின் அரசாங்கங்கள் பிரசாரம் செய்கின்றன. வளர்ச்சியடைந்துள்ள இந்த இலத்திரனியல் யுகத்தில் கையடக்கத் தொலைபேசிப் பாவனையற்ற சமூகத்தை உருவாக்குவதென்பது இயலாத காரியம். எனினும் இந்த இலத்திரனியல் சாதனங்களை எம்மில் இருந்து எவ்வளவு தூரத்தில் வைத்திருக்கவேண்டும், எங்கு வைத்திருக்க வேண்டும், அதன் பயன்பாடுகளை எவ்வாறு மட்டுப்படுத்த முடியும் என்பன பற்றி பொதுமக்கள் அறிவூட்டப்பட வேண்டும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More