Home இலங்கை எல்லாருக்கும் முகப்பூச்சுத் தேவைப் படுகிதே ஒழிய, உண்மை நிலவரத்தை ஆரும் விரும்பிறதாக் காணேல்லை.

எல்லாருக்கும் முகப்பூச்சுத் தேவைப் படுகிதே ஒழிய, உண்மை நிலவரத்தை ஆரும் விரும்பிறதாக் காணேல்லை.

by admin
  • பொஸிற்றிவ் பொன்னம்பலம் -சனி முழுக்கு 16

“அண்ணை இப்பதான் எனக்குக் கொஞ்சம் மனம் நின்மதியாக் கிடக்கு .தங்கச்சிக்குக் கலியாணம் பேசேக்கை அண்ணனுக்குரிய பொறுப்பெண்டு அம்மா சிலதைச்  செய்யச் சொன்னவ.மாப்பிளை கொழும்பிலை உத்தியோகம் எண்டபடியாலை  கட்டாயம் அவளுக்கொரு வீடு வாங்கிக்குடுக்க வேணும் எண்டது அம்மான்ரை ஆசைய. அதை இந்தமுறை வரேக்கைதான்  செய்யக் கூடியதாயிருந்திது. செய்து போட்டன். ஒரு அறை பிளாட் தான். ஆனால் வெள்ளவத்தையிலை எண்டபடியாலை எல்லா வசதியளும் கிட்டக்கிட்ட இருக்கு. அந்தாளில்லாட்டிலும் தங்கச்சி தனியச் சமாளிப்பள்.” எண்டு சொல்லிக் கொண்டு மூத்தாற்றை மேன் நேற்றைக்கு வந்தவன். ஆள் குடும்பத்தோடை இலண்டனிலை தான் இருக்கிறான். இப்ப ஐப்பசியிலை  வந்தபடியாலை எனக்கெண்டு கொஞ்ச இனிப்பில்லாத சொக்கிளேட்டும் ஒரு தடிச்ச முழுக்கை பெனியனும் கொண்டு வந்தவன்.“அண்ணை வீடு எழுதிற அலுவலா வந்தபடியாலை ஒண்டும் பெரிசாக் கொண்டு வரேல்லை. வெளிக்கிடேக்கைதான் இப்ப இஞ்சை மாரிகாலம் எண்டதை நினைச்சன். குளிர் காலமெல்லே எண்டிட்டுத்தான் இதைக் கொண்டு வந்தனான்.” அவன் லண்டனுக்கு வெளிக்கிடேக்கை மூத்தார் வந்து கொஞ்சம் மாறித்தரச் சொல்லிக் கேட்டாப்போலை நான் என்னட்டை இருந்ததைக் குடுத்தனான். பெடி அதை ஒரு வருசத்துக்குள்ளை உழைச்சனுப்பினாலும் அந்த நன்றியை மறக்கேல்லை. நல்ல பெடி.

அதாலை அவன் வஞ்சகமில்லாமல் எல்லாத்தையும் சொன்னான்.வீடு வாங்கி எழுத எல்லாத்தையும் சேத்து ஒண்டிருபது முடிஞ்சுதாம்.“இப்ப உது பறவாயில்லை. குடும்பம் பெருக்க உது காணுமோடா? தம்பி!” எண்டு அவனிட்டைக் கேட்டன். “என்ன செய்யிறதண்ணை? விரலுக்குத் தக்கனைதானே வீக்கம். லண்டனிலை என்னைபபோலை உழைச்சுச் சீவிக்கிற ஆக்களுக்கு உது பெரிய விசியம். உதைவிட ஒரு ஆள் பெரிசாச் செய்யினமெண்டால் ஒண்டில் அவர் வியாபாரம் செய்யிறவரா இருப்பர். இல்லாட்டி மற்ற விளையாட்டுக்காறரா இருப்பர். இது இரண்டும் இல்லாட்டி  ஒண்டும் பெரிசாச் செய்லோது அண்ணை.” எண்டு உண்மையைக் கதைச்சவன்.

நான் கேள்விப்பட்டதிலை உவன் சொன்னதுதான் உண்மை. உதைக் கேக்கைதான் வெளிநாட்டிலை இருந்து வந்து கொழும்பிலை வீடீயோக் கடை வைச்சிருக்கிற எனக்குத் தெரிஞ்ச ஒராள் வலு வெளிப்படையாச் சொன்னவன். “அண்ணை இஞ்சை கொண்டு வந்து போட்ட முதல் எல்லாத்தையும் நான் அங்கை நேர்மையா உழைக்கேல்லை. பல தில்லு முல்லுச் செய்துதான் உழைச்சனான்.ஆனால் தயவு செய்து என்ன செய்தனான் எண்டதை என்னட்டைக் கேக்கப்படாது.ஆனால் இப்ப இஞ்சை உழைக்கிறதிலை எனக்குத் தெரிஞ்ச  ஆக்களிலை இல்லாதுகளுக்கு குடுக்கிறன்.”  எண்டு சொன்ன அவனை என்னாலை முழுமையா ஏற்கேலாட்டிலும் அவன் உண்மையை  ஒத்துக் கொண்ட படியாலை இனிப் பிழைவிடான் எண்டு நினைக்கிறன்.

ஆனால் வெளி நாட்டுக்காறர் வந்து கொழும்பிலை வீடுகளையும் வாங்கி காசை முடக்கிறதும், ஊரிலை வந்து கோயில்களிலை முடக்கிறதையும் நான் ஒரு பெரிய புத்திசாலித்தனமெண்டு சொல்லமாட்டன்.ஏனெண்டால் உதுக்குப் பின்னாலையும் ஒரு பெரிய அரசியல் இருக்கெண்டு பேராசிரியர் ஒருதர் எழுதின கட்டுரை ஒண்டை வாசிச்ச ஞாபகம். வருவாய் இல்லாத முதலீட்டை ஊக்குவிக்கிறதும் ஒருவகையிலை ஒரு சமூகத்தைின்ரை செயற்பாடுகளை முடக்கிறதுமாயிருக்குமாம். உண்மைதான். பாக்கப்போனால் எங்கடை தமிழ் சனத்தின்ரை பெருவாரியான காசு வெள்ளவத்தை பிளாற்றுக்குள்ளையும் , கோயிலிலை கட்டிடமாவும், தேர், மஞ்சம், சகடை எண்டு எத்தினை வகையா முடங்கிப்போய்க் கிடக்கு. உவ்வளவும் ஒரு கிராமத்திலை தொழிலல்சாலைகளாக் கிடந்தா எத்தினை பேருக்கு வேலைவாய்ப்பு. நாட்டின்ரை தேசிய வருமானத்தின்ரை பெருமளவை நாங்கள் வைச்சிருந்தால் கவுண்மென்ரும் எங்களுக்குப் பயப்பிடும். கோயில் குளத்துக்குச் செய்ய வேண்டாம் எண்டு நான் சொல்லேல்லை. கோயில்காரருக்கு கோயிலுக்குப் பக்கத்திலை குளத்தைத் திருத்திறதைவிட்டிட்டு கோயிலுக்குள்ளை இருக்கிற அத்தினை சுவாமிக்கும் தேர் செய்யிறது. பிறகு எல்லாம் செய்து முடிஞ்சால் அங்கை உள்ள வெள்ளியாலை செய்த சாமான்களுக்குத் தங்கம் பூசுறதெண்டு அவையின்ரை எடுப்புப் பெரிசாக்கிடக்கு. அந்த எடுப்பைத்தான்  வேண்டாம் எண்ணுறனே ஒழிய கோயிலுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யட்டும்.

மற்றது பிளாற்றா ஏன் வாங்கிவிடுகிறது புத்திசாலித்தனமில்லை எண்டு சொல்லுறன் எண்டால் ஒரு பிளாற்றின்ரை காலம் ஆகக் கூடினது எத்தினை வருசம் , ஒரு எழுபது? அதுக்குப் பிறகு அந்த பிளாற் இருக்கிற நிலத்துக்குத்தான்  விலையே ஒழிய பிளாற்றுக்குப் பெறுமதி இல்லை.பிறகேன்  பிளாற்றிலை காசைக் கொண்டுபோய் முதலிட வேணும் எண்டு கேக்கிறன்?

இதைச் சொன்னாப்பிறகு நான் சொன்னது சரி எண்டு மூத்தற்றை பேரன் ஒத்துக்கொண்டான். ஆனால் உதை எல்லாம் ஆர்  இப்ப கேக்கினம்? எல்லாருக்கும் முகப்பூச்சுத் தேவைப் படுகிதே ஒழிய,  உண்மை நிலவரத்தை ஆரும் விரும்பிறதாக் காணேல்லை. உள்ளுடன் என்னவாக இருக்கட்டும்.வெளித்தோற்றம் நல்லா இருக்க வேணும் எண்டதிலை எங்கடை ஆக்கள் வலு தெளிவாயிருக்கினம். இப்ப எல்லாம் தலைகீழாக் கவுண்டு போய்க்கிடக்கு. என்ன நடக்கப் போகுதெண்டு பாப்பம்.

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More