177
தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஓரணியில் ஒன்று சேர்ந்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் ,
ஈழத் தமிழ் மக்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. இக் கட்சி தமிழகத்தில் இருந்தாலும் ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் ஒரே நிலைப்பாட்டுடனனேயே செயற்பட்டு வருகின்றது. நாங்கள் அங்கு எந்தக் கூட்டணியில் இருந்தாலும் எமது கட்சியைப் பொறுத்தவரையில் தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.
ஈழத் தமிழ் மக்களுக்கு தீர்வு வேண்டுமென்பதில் இன்றைய சூழ்நிலையிலும் உறுதியாக இருக்கின்றோம். என்றென்றைக்கும் ஈழத்தமிழர் மனங்களில் நாங்கள் நேர்மையாகவும் தூய்மையாகவும் பணியாற்றுவோம்.
ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும் எனும் முழக்கத்தோடு ஈழம் ஒன்றே தீர்வு என்ற கருத்திலும் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இன்றைக்கு அது பொருந்துவதாக இல்லாமல் இருக்கலாம். அல்லது சரியானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு ஈழம் தான்.
அது 25 ஆண்டுகளுக்கு இன்னும்தள்ளிப் போகலாம். ஆகவே இப்ப அதனை விவாதிப்பது பொருத்தமற்றது என்ற விமரச்சனமும் இருக்கலாம். ஆனால் ஈழத் தமிழர்களின் நலன்களில் விடுதலைச் சிறுத்தைகள் என்றென்றும் செயற்படும்
ஈழத் தமிழர்களை நாங்கள் எப்போதும் பிரித்துப் பார்த்ததில்லை. ஈழத்தமிழர்களை எமது தொப்புள்கொடி உறவு என்றல்லாமல் ஒரே குருதி உறவாகவே பார்க்கின்றோம். ஆகையினால் நாம் எல்லோரும் ஒன்று என்ற அடிப்படையில் தான் அனைத்துப் பிரச்சனைகளையும் அணுகுகின்றோம்.
நான் கடந்த காலங்களில் இங்கு வந்திருக்கின்ற நேரங்களில் அப்போது எங்க பார்த்தாலும் இராணுவக் கெடுபிடி இருந்தது. மக்கள் எம்முடன் பேச அஞ்சினார்கள். ஆனால் இன்றைக்கு அந்த நிலைமை மாறியிருக்கின்ற போதிலும் வலியும் துயரமும் மக்களிடமிருந்து இன்னமும் அகலவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை , காணாமல் போனோர் , நில விடுவிப்பு படை ஆக்கிரமிப்பு. இவ்வாறு மக்களின் வலி துயரம் அப்படியே இருக்கின்ற நிலையிலும் வேட்டுச் சத்தம் மட்டுமே இல்லை.
ஆகவே ஈழத்திலுள்ள மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைக் காண தொடர்ந்தும் நாம் உறுதியுடன் செயற்படுவோம். என தெரிவித்தார்.
தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.
அதேவேளை தமிழர்களின் பாதுகாப்பு நலனை அடிப்படையாகக் கொண்டு ஈழத் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் தெளிவாக தூர நோக்கு பார்வையோடு செயற்பட வேண்டும். நமக்கிடையே அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் கூட ஒன்றுபட்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும். இணைந்து செயற்படுவது அவசியமானது.
அதுவே காலத்தின் பொருத்தமாகும். சிறிலங்காவில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடிகளை தாயகத்தில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே தனது வேண்டுகோள். ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்தது ஐனநாயககப் படுகொலை. சட்டத்தை விதிகளை மரபுகளை மீறி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது ஐனநாயகத்திற்கு முரணாணனது.
இதனை இந்தியா உட்பட சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஒரு நாட்டின் அரசியலில் பிற நாடுகள் தலையிட கூடாது என்றாலும் கூட இந்த நடவடிக்கைகள் ஐனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையயை பாதிக்கும்.
ஆகவே இந்தியா உள்ளிட்ட அரசுகள் கண்டணத்தை பதிவு செய்ய வேண்டும். மகிந்த வரக்கூடாது என்பது மட்டுமே விருப்பமாக இருக்க முடியாது.
என்னைப் பொறுத்தவரையில் சிங்களக் கட்சிகள் அதன் தலைவர்கள் யாராக இருந்தாலும் தமிழீழத்திற்கு எதிரானவர்கள் தான். தமிழிழ நலன்களுக்கும் எதிரானவர்கள். ஆனால் அவர்களை எப்படி எம் வழிக்கு கொண்டு வருவதற்கு நாம் வலிமையோடு இருக்க வேண்டும். நடாளுமன்றத்திற்கு உட்பட்டு நம்மை வலிமைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.
அதற்கு ஒருங்கிணைந்து செயற்படுவது தான் சிறந்தது. சிங்களவர்களிடமிருந்து எமது கோரிக்கைகளை வென்றெடுக்க எமக்கிருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு நாம் ஒற்றமையாக இருப்பது. தமிழ் கட்சிகள் தலைவர்கள் ஒருங்கிணைய வேண்டும். ஒன்றுபட்டு இத் தேர்தலைச் சந்திக்க வேண்டும்.
விக்கினேஸ்வரனைச் சந்தித்த போதும், தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து செயற்பட வேண்டுமென்பதனைச் சொல்லியிருக்கின்றேன்.
தமிழ்த் தேசியக் கொள்கையுடன் செயற்படுகின்ற எல்லாக் கட்சிகளும் கடந்த காலங்களில் சேர்ந்து செயற்பட்டவர்கள். இப்ப பிரிந்து நிற்கின்றனர். ஆகவே நடைபெறும் நடாளுமன்றத்தில் பிரிந்து இருக்காமல் சேர்ந்து செயற்பட வேண்டும். அந்த முயற்சி தான் தேவை.
ஒருவருக்கு ஒருவர் சந்தேகப்பட்டுக் கொண்டு அல்லது விமர்சித்துக் கொண்டு இருக்கிற போக்குகளை முடிந்தவரை கைவிட முன்வாருங்கள். நமக்கிடையில் நாம் விமர்சித்துக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லலை. அவ்வாறு செய்வது அடுத்த தலைமுறைக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாககத் தான் இது அமையும்.
எனவே கடந்த காலங்களில் எமக்கு ஏற்பட்ட பாதிப்புக்ககளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை நிறையவே இருக்கின்றன.
அதிலும் கடந்த பத்தாண்டு காலத்தை சுய விமர்சனங்களுக்காகவே பாழாக்கிவிட்டோம். ஆகவே அந்த நிலைமை இனிமேலும் தொடரக் கூடாது.
இனி கொள்கைப் பகைவர்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் நாம் ஓரணியில் திரள வேண்டும். அதற்கு நம்முடைய சக்திகளைப் பயன்படுத்த வேண்டும்.
ஏனெனில் நமது தோளில் கையைப் போட்டுக் கொண்டே வேரறுக்கக கூடிய சிங்கள தலைவர்களை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.
ரணில் விக்கிரமசிங்க என்ன செய்தார் என்பதும் மகிந்த ராஐபக்ச என்ன செய்வார் என்பதும் தெரியும்.
ஆகையினால் எமது மக்களுக்காக நாம் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் அவசியம். பிராந்திய நலன்கள் சர்வதேச அரசியல் ஆகியவற்றைக் கொண்டு எமது போக்குகள் அமைய வேண்டும்.
அத்தகைய அனுகுமுறையைப் பொறுத்தும் கையாளும் உத்தியைப் பொறுத்து தான் இவை எல்லாம் இருக்கிறது. நாம் செய்ய வேண்டியது என்னவெனில் தமிழ்ச் சமூகம் தமிழகத்திலும், தாயகத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் வாழ்ந்தூலும் சரி ஆற்றாமை விமரச்சனைங்களை வெளிப்படுத்தக் கூடிய வகையில் நமக்கிடையிலான விமரச்சனங்களை தான் கையிலெடுத்திருக்கின்றோம்.
அதனையெல்லாம் உண்மையில் கைவிட்டு நமக்கான அரசியல் தீர்வு எது அதனை எவ்வாறு அடையப் போகிறோம். இதற்கு யாருடைய ஆதரவைப் பெற்றுக் கொள்ளப்பொகிறோம் என்று சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
சர்வதேச சமூகத்தினுடைய ஆதரவில்லாமல் ஈழத்தமிழர்களுக்கு தீர்வைக் காண முடியாது. அதற்கு சர்வதேச நன்மதிப்பு ஆதரவைப் பெற்றாக வேண்டும். அதற்கேற்ப தமிழ்ச் சமூகம் ஒன்றாக உலக அரங்கில் பலத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றன.
தமிழ் சமூகம் விமர்சனங்களை ஓரம் வைத்துவிட்டு அடுத்த பத்தாண்டு என்ன செய்யப் போகிறோம் என்ற விரிவான பார்வை நோக்க வேண்டும். ஆகையினால் கட்சித் தலைவர்களைத் தாண்டி பாதிக்கப்பட்ட தமிழ் சொந்தங்களுக்காக தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் எல்லாம் ஒன்றுபட வேண்டும். இதனை மக்களே முன்வைக்க வேண்டும். மக்;களை வழிநடத்தும் அரசயில் தலைவர்கள் எல்லாரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்றார்.
Spread the love