ஜனநாயகம் தொடர்பில் துளி அளவேனும் மரியாதை மற்றும் வெட்கம் இருக்குமானால் கொள்ளைக்கார ஆட்சி வெளியேற வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஒன்றின்போது அவர் இக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 122 பேர் பெரும்பான்மையை சிறப்பான, பண்பான மற்றும் முறையான விதத்தில் வெளிப்படுத்தி உள்ளதாக குறிப்பிட்ட அவர், மஹிந்த ராஜபக்ஸ தொடர்ச்சியாக தேசபக்தி, தேசியம் மற்றும் நாட்டு மக்கள் தொடர்பில் எங்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டு அதனை மதிக்கவில்லை என்று தெரிவித்தார்.
தேசபக்தி, தேசியம், நாடு என்பன எல்லாம் அடிப்படை சட்டமான அரசியலமைப்பை கொண்டே இருப்பதாகவும் முதலில் அரசியலமைப்பை மதிக்க தெரியவேண்டும் என்றும் அரசியலமைப்பை மதிக்காது தேச பக்கி பற்றி வகுப்பெடுக்க முயற்சிக்க கூடாது என்றும் கூறினார்.
மீண்டும் தமது ஆட்சி சட்டபூர்வமாக உருவாக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட மனோ, இதற்கு ஜனநாயக ரீதியாக ஒத்துழைப்பு வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
மக்களுடைய வார்த்தைக்கு மதிப்பளித்து ஜனாதிபதி செயற்பட வேண்டும் – ரிஷாட் பதியுதீன்:-
இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, மக்களுடைய வார்த்தைக்கு மதிப்பளித்தும், 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் ஜனநாயகத்தை விரும்பக்கூடிய மக்கள் எதிர்ப்பார்த்த தீர்வை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளதன் மூலம் நாட்டில் இன்று ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சுதந்திரத்துக்குப் பின்னர், இந்த நாட்டில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவ்வாறான நாட்டில் அதிகப்படியான சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற்று ஜனாதிபதியானவர் கடந்த 26 ஆம் செய்த மாபெரும் மோசமான செயலிற்கு உயர் நீதிமன்றத்தினால் நேற்று தீர்ப்பு ஒன்றினை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவையும், புதிய அமைச்சரவையையும் நிராகரிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, சபாநாயகரிடம் கையளித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையை உயர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறிய அவர் இதன் பிறகு நாட்டிலே நல்லதொரு அரசியல் நிலை ஏற்படும் என்ற பாரிய நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.