பிரெக்ஸிற் வரைவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக எழுந்துள்ள கருத்தை மறுத்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பிரித்தானியாவில் நிலவும் அரசியல் சூழலால் இந்த ஒப்பந்தம் ஏற்படாமல் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் வரைவு ஒப்பந்தம் தற்போது தயாராகி விட்டநிலையில் இது குறித்து மறு பேச்சுவார்த்தை நடத்தும் பேச்சே இல்லை என ஜெர்மனியின் அதிபர் அன்ஜலா மோர்கல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரெக்ஸிற் தொடர்பான பிரித்தானியாவின் நிலையில்லாத்தன்மையால் எந்த ஒப்பந்தமும் ஏற்படாமல் போகும் சாத்தியமும் வரக்கூடும் எனவும் அதற்குத் தயாராக வேண்டும் எனவும் என பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மக்ரோன தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் பிரித்தானியாவில் 4 அமைச்சர்கள் பதவிவிலகியுள்ள நிலையில் பிரதமர் தெரசா மே நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார். மேலும் இந்த வரைவு ஒப்பந்தத்தில் உள்ள அதிருப்தி காரணமாக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பிலேயே பிரதமர் தெரசா மேயுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி நடந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது