Home இலங்கை அப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்?

அப்ப, வழிகாட்டி பிழைச்சால் வண்டிபோற பாதையும் பிழைக்கும்?

by admin

சனி முழுக்கு 17  – பொஸிற்றிவ் பொன்னம்பலம்

முந்தநாள் மணியண்ணையின்ரை பெடி வந்தவன். தேப்பன் மணியம் கொஞ்சம் சுகமில்லாமல்  படுத்திருக்கெண்டு லண்டனிலை இருந்து பாக்க வந்தவன். அவன் தேப்பனோடை இரண்டு கிழமை ஆஸ்பத்திரியிலை மினைக்கெட்டுப் போனான். போறதுக்கு முன்னம் என்னையும் பாத்திட்டுப் போவம் எண்டு வந்தாப்போலை கையிலை கான்போன் வச்சிருந்தவன். “அண்ணை நாட்டிலை என்ன நடக்கிது? பாருங்கோ எங்கடை ஆக்களின்ரை சீத்துவக் கேட்டை” எண்டு கான்போனைக் காட்டினான். “சந்தை தோத்துப்போம். அப்பிடிச் சத்தமும் அடி பிடியும். அதுக்கை ஒண்டு அங்கை கிடந்த குப்பைக் கூடையை எடுத்துச் சபாநாயகருக்கு எறியிது. அந்தக் குப்பைக் கூடையைத் தூக்கி எறிஞ்சதும் ஒரு குப்பையாத்தானிருக்க வேணும். நாட்டிலை உள்ள குப்பையளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால் உதுதான் நடக்கும்.உப்பிடித்தான் இருக்கும். உவங்கள் எங்களை ஆண்டு, எங்களுக்கு விமோசனம் தந்து, எங்களை இரட்சிச்சு காப்பினம் எண்டு நினைக்கிறியளே? சின்னப் பிள்ளையளை ஏமாத்திறமாதிரிக் “கோடி தாறன், கோவணந்தாறன் ”எண்ட மஹிந்தாவின்ரை பேச்சிலை மயங்கி அவருக்குப் பின்னாலை போனவை படுகிற பாட்டைப் பாத்தனியளே? மணியத்தின்ரை பெடி அதெல்லாத்தையும் காட்டிப்போட்டுக் கெக்கட்டம் விட்டுச் சிரிச்சவன்.அவனுக்கு இஞ்சை நடக்கிறதுகளைப் பாக்கச் சிரிப்பாக்கிடக்கு.

“அது சரி அங்கை இருந்து வாறவை மாதிரி நீயும் கோவில் குளத்துக்கு ஏதேன் செய்யிற நோக்கம்?” எண்டு தெரியாமல் ஒரு கேள்வியைக் கேட்டன். அவனுக்கு வந்திது கோவம். அவன்ரை முகத்தைப் பாத்து நான் பயந்திட்டன். “ அண்ணை அங்கை நேர்மையா உழைச்சால் உதொண்டும் செய்லோது. உந்தக் கோமாளி வேலையள் எல்லாம் செய்யிறவை அங்கை கள்ள விளையாட்டு விளையாடிப்போட்டு இஞ்சை வந்து தங்கடை பாவத்தை கழுவுறதுக்குத்தான் கோயில், குளம் எண்டு திரிஞ்சு கோயிலையும் பழுதாக்கி, சமயத்தையும் கொச்சைப்படுத்தி, ஊரையும் பழுதாக்கிப்போட்டுப் போயினம். ஒரு ஊரின்ரை வளர்ச்சி எண்டால் எப்பிடி இருக்க வேணும் எண்டு நினைக்கிறியள்?. ஊராக்கள் கூடி அவை தங்கடை தங்கடை உழைப்பிலை சேத்து பொது வேலையளைச் செய்தால்தான் அது உண்மையான வளர்ச்சியா இருக்க வேணும். ஊர் சனத்தின்ரை பங்களிப்போடை அது நடக்க வேணும். அப்பதான் அவைக்கு அதைச் சரியாப் பராமரிக்க வேணும் எண்ட அக்கறையும் வரும்.இது அதைவிட்டிட்டு ஏதாவது தில்லுமுல்லுச் செய்து கொண்டு வந்து ஊரைப் பழுதாக்கிறது. உண்மையா உழைச்சவன் எண்டால் அவன் தன்ரை காசைக் கொண்டு வந்து ஊர்ச்சனத்துக்குப் பிரயோசனமான ஒண்டை செய்வினம். நேற்றைக்கு ஒரு அலுவலாக் கச்சேரிக்குப் போன்னான். அங்கை கோயில் கதை வரேக்கை ஏஜீஏ என்ன சொல்லுறார். தங்களிட்டை ஆயிரம், ஆயிரத்தைஞ்நூறு கோயில்களின்ரை பதிவிருக்காம். ஆனால் சனத்துக்குப் பிரயோசனமா இருக்கிற சனத்திலை அக்கறையா இருக்கிற கோயில்கள் இரண்டு, மூண்டு எண்டு சொன்னவர்.

நானும் பாத்தன் அடிக்கடி இடிக்கிறதும் கட்டுறதுமா இருக்கினமே ஒழிய வேறை ஒண்டுமாக் காணேல்லை. கோயில் எண்டால் சனத்திட்டை லேசாக் காசை வாங்கலாம் எண்டது அவைக்குத் தெரியும். கோயிலை நடத்திறதுக்குரிய பக்குவம் அவையிட்டை இருக்கோ எண்டு ஒருக்காப் பாருங்கோ!

போன முறை வந்து நிக்கேக்கை ஒரு கோயிலிலை பாத்தன்  அந்தக் கோயில் வரலாறு எழுதின கல்லை மறைச்சுப் பெயின்ரை அடிச்சு வைச்சிருக்கிறாங்கள். அது கோயிலுக்குரிய பெறுமதியான ஆவணம் எண்டது கூட அவைக்குத் தெரியாமல் கிடக்கு. அப்ப எப்பிடி அவை கோயிலை நிர்வாகம் செய்யிறது.

முதலிலை வெளிநாட்டுக்காரர் வந்து காசைக் குடுத்து கோயிலை இடிச்சுக் கட்டுறதை நிப்பாட்ட வேணும். அவை அந்தக் காசைக் கொண்டு வந்து வேறை ஏதாவது பொதுக் காரியம் பண்ணட்டும். எத்தினை பேர் சாப்பாட்டுக்கு அந்தரிக்கினம். எத்தினை குடும்பங்கள் ஆண்துணை இல்லாமல் கஸ்டப்படுகினம். வன்னியிலை ஆறேழு கிலோமீற்றர் நடந்து பள்ளிக்குடத்துக்கு வாற பிள்ளையள் எத்தினை பேர் இருக்கினம். அவைக்குச் சைக்கிள் வேண்டிக் குடுத்தால் அதுகள் கொஞ்ச நேரத்தை மிச்சப்படுத்திப் படிப்பினமெல்லே? இது கன தூரம் நடந்து வந்து அவை எப்பிடிப் படிக்கிறது? நல்லாக் களைச்சுப் போவினம். பிறகெப்பிடிப் படிக்கிறது?

சரி கோயிலுக்குச் செலவழிக்கிறதையும் ஒழுங்காச் செலவழியுங்கோவன். பல  வருசமாக் கிடந்த பென்னாம்பெரிய தூணை இடிச்சுப்போட்டு வடிவா இருக்கட்டும் எண்டு கோடிக்கணக்கான காசைச் செலவழிச்சுப் போட்ட சீமெந்து பிளாற்றெல்லாம் இப்ப மழைக்கு ஒழுகுது. அப்ப உதை ஆர் பாக்கிறது? உவையிட்டை ஆர் சொன்னது அந்தப் பழைய தூணை இடிக்கச் சொல்லி. இனி கோயில் ஒழுகுதெண்டு காசு சேர்ப்பினம். – எண்டு மணியத்தின்ரை பெடி இஞ்சை இல்லாட்டிலும் ஊரிலை நடக்கிறதை எல்லாம் அக்குவேறா ஆணி வேறாச்  சொல்லுறான்.

மணியத்தின்ரை பெடி சொல்லுறது சரிதான். வெளி நாட்டிலை இருந்து வாறவையிலை நல்லது செய்யிறதைவிட கேவலமான வேலையளைச் செய்திட்டுப் போறவைதான் கனக்கவாக்கிடக்கு. நல்லதும் செய்யினம் அதோடை அவை தங்களை அறியாமல் சில கேவலத்தையும் செய்துபோட்டுப் போயிடுவினம். இஞ்சை என்ன நடக்கிறதெண்டது அவைக்கு ஒண்டும் வடிவாத் தெரியாது. அவைக்கு இஞ்சை எடுபிடியள் இருப்பினம். அதுகள் நல்லதா அவைக்கு வழி காட்டினால் அவை நல்லதைச் செய்திட்டுப்போவினம். இல்லை அவைக்குக் கோப்பிரேஷனையும், கொத்து ரொட்டிக் கடையளையும் காட்டினால் அவை அதிலை காசைச் செலவழிச்சுப் போட்டுப் போவினம். அப்ப வழிகாட்டி பிழைச்சால் எல்லாம் பிழைக்கும்.என்ன????

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More