மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளித்த 122 பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொழும்பில் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவையும் அந்தக் கட்சி நாடியுள்ளது.
மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக பாராளுமன்றில் மூன்று தடவைகள் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். ஆயினும், அந்தத் தீர்மானம் பாராளுளுமன்றச் சம்பிரதாயங்களுக்கு அமைவாக நிறைவேற்றப்படாமையால் அதனை ஏற்கமுடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்து வருகின்றார்.
இந்நிலையில், மகிந்தவுக்கு எதிராக வாக்களித்த 122 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலக்கமிடப்பட்ட பதாகைகளை வழங்கி அவர்களை ஜனாதிபதி செயலகம் முன்பாக அல்லது சுதந்திர சதுக்கத்தில் நிறுத்தி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு மகிந்தவுக்கான எதிர்ப்பை சர்வதேசத்துக்குக் காண்பிக்கும் நடவடிக்கையில் ஐ.தே.க. இறங்கியுள்ளது.
இதன் ஓர் அங்கமாக நேற்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தவேளை, அங்கு நுழைந்த ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் காசிம், மாரசிங்க, எரான் விக்கிரமரட்ன, ஜயம்பதி விக்கிரமரட்ன, அஜித் பி.பெரேரா மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் இந்த எதிர்ப்புப் போராட்டத்துக்குக் கூட்டமைப்பின் ஆதரவையும் நாடியுள்ளனர்.