பலம் உண்டேல் பயம் இல்லை. பலம் இன்றேல் பயன் இல்லை.
உணவுப்பொருட்களை இயற்கைமுறையிலே பதப்படுத்திப் பாதுகாத்து வைக்கின்ற முறையானது மீண்டும் எழிச்சிபெறத் தொடங்கியிருக்கிறது. பருவகாலத்தில் அதிகமாகக் கிடைக்கின்ற பொருட்களை ப்பதப்படுத்திப் பாதுகாத்துச் சேமித்து வைத்துப் பின்னர் அவற்றை பெறுதற்கரிய காலங்களில் உபயோகிப்பதென்பது தொன்றுதொட்டு நடைபெற்றுவரும் வழக்கம் எனலாம். இயற்கையாக எழிய முறையில் உணவுப்பொருட்களைப் பதனிடுவதென்பது கிராமிய மட்டத்தில் அன்றாடம் நடைபெறுகின்றதொரு நிகழ்வாக இருக்கிறது. வேம்பம்பூ, வாழைப்பூ என்பனவற்றில் வடகம் தயாரிக்கப்படுகிறது. பனங்கழியில் பனாட்டும், பனங்கிழங்கில் ஒடியலும் பதனிடப்பட்ட பனந்தயாரிப்பாக எமக்குக் கிடைக்கிறது. அது போகக் கடற்கரைக் கிராமங்களிலே கடல் உணவுகளைக் கருவாடாகப் பதனிடுவதைப்போல காடுகளில் வேட்டையாடுபவர்களும் தமது தேவைக்கு அதிகமானவற்றைப் பதனிட்டுப் பின்னர் பயன்படுத்துகிறார்கள். கிராமங்களில், வத்தலாக்கப்பட்ட உணவுப்பொருட்கள் பாதுகாக்கப்படும் இடமாகச் சமையலறையில் உள்ள புகைபோக்கிகள் பயன்படுத்தப்பட்டன. அத்தகைய புகைபோக்கியினுள் தொங்கவிடப்பட்டிருக்கும் உறியில் அடுக்கடுக்காக மட்பாண்டங்கள் வைக்கப்பட்டிருக்கும். அத்தகைய மட்பாண்டங்களிலேயே பதனிடப்பட்டவைகள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம்.
எமது கிராமங்களில் உணவுப்பொருட்களைப் பதனிடுவதென்ற பழக்கவழக்கம் குடும்ப வாழ்வியலோடு ஒத்த விடயமாகக் காணப்பட்டது. இன்று அந்த நிலை குறைவடைந்தாலும், அது ஒரு தொழிற்துறை சார்ந்தவிடயமாகக் வளர்ச்சிபெற்றிருக்கிறது. அதுவும் உள் நாட்டுத் தேவைகள் என்றதற்கு அப்பால் புலம்பெயர் தமிழரிடையே எழுந்த உள்ளூர் உணவுபற்றிய ஆவலும், அங்கு காணப்படும் சந்தைப்பெறுமானமும் தான் இத்தகைய பதனிடுகின்ற வழக்கத்தைத் தக்க வைத்துக்கொண்டிருப்பதற்குரிய முக்கிய காரணமெனலாம்.
தற்போது சுய தொழில் வாய்ப்பை மேம்படுத்துவதில் ஈடுபட்டிருக்கின்ற அரச திணைக்களங்களும், அரச சார்பற்ற தனியார் நிறுவனங்களும் இதற்குரிய பயிற்சி நெறிகளை வழங்கி ஊக்குவிக்கின்ற அதே சமயம் தொழில் அபிவிருத்திச் சபையினால் பயிற்சி நெறிகளோடு தொழில் நுட்பமும், அதற்குரிய உபகரணங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படுவதாக அறிகின்றோம்.பெரும்பாலும் இத்தகைய தொழில்களைப் பெண்கள் மத்தியில் குறிப்பாக அவர்கள் சார்ந்த மாதர் சங்கங்கள் மற்றும் பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் மத்தியில் ஊக்குவிப்பதன் மூலம் சிறந்த பெறுபேறைப் பெறலாம் என்கிறார் கிராம முன்னேற்றச் சங்க உறுப்பினர் ஒருவர்.
இருந்தும் காய்கறிகளும், பழவகைகளும் அவ்வப்போது மிகவும் தாழ்ந்த சந்தைப் பெறுமானத்தை அடைகின்ற வேளை பதனிடுவதென்பதைச் செய்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எம்மத்தியில் உண்டு. இயற்கையான வற்றிற்கு ஏற்படும் தட்டுப்பாடே செயற்கையான, மக்கள் ஆரோக்கியத்தைக் கேள்விக் குறியாகக் கூடிய உணவுப் பொருட்கள் சந்தைக்கு வருவதற்குரிய காரணங்களில் ஒன்று எனலாம். “நாங்கள் எவ்வளவு தொகையையும் வாங்க ஆயத்தமாக இருக்கிறோம்.இது பற்றிக் கிராமத்தவர்களோடு பேசியும் இருக்கிறோம். குறிப்பாகக் கடந்த ஆவணி – புரட்டாதி மாதத்தில் எலுமிச்சம் பழம் கிலோ ரூபா 20/= விற்கப்பட்ட சமயம் அதைப் பதனிட்டுத் தரும்படி கேட்டிருந்தோம். தற்போது ஐப்பசிமாதத்தில் ஒரு காயை ரூபா.50-60 கொடுத்து வாங்க வேண்டிய நிலை வந்துவிட்டது. ஆனால் மக்கள் இது போன்றவற்றை விட்டு இலகுவாகச் செய்யக்கூடியவைகளையே நாடுவதாகத்தான் நிலைமை இருக்கிறது,” என்கிறார் கொழும்பை மையமாகக் கொண்டு தொழிற்படும் ஏற்றுமதியாளர் ஒருவர்.
இப்படிப்பட்ட சமயத்தில் கிராமத்துப் பொருளாதாரத்தை மேம்படுத்துகின்ற வகையில் விவசாய உற்பத்திகளைப் பதனிட்டு ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் திரு.ஞானமூர்த்தி விக்கினேஸ்வரமூர்த்தியைச் சந்தித்தோம்.அவர் செம்புலம் உலர் உணவு உற்பத்திகள் (www.sempulamdf.com) என்ற பெயரிலேயே தனது உற்பத்தியை சந்தைப்படுத்திவருகிறார். குப்பிளான் வடக்கில் வசிக்கின்ற இவர் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.உணவுப் பொருட்களைப் பதனிடும் பக்குவத்தை நன்கு அறிந்து வைத்திருக்கிறார். அவரைச் செல்லமாக மூர்த்தி என்று அழைக்கின்றனர். அவரிடம் அவர் முயற்சிபற்றிக் கேட்டோம்.
வணக்கம். இயல்பிலேயே எனக்கு இப்படிப்பட்ட முயற்சியில் ஆர்வம் உண்டு. அதைவிட நான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.பொதுவாகக் கிராமத்தின் வாழ்வாதாரம் என்பது விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது என்றபடியால் கிராமியப் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற சிந்தனையை என்னுள் கொண்டிருக்கிறேன். கிராமத்தவர்கள் தமது உற்பத்தியில் சிறந்த பலனை எட்ட வேண்டும் எனில் அவர்கள் விளைபொருட்கள் முறையாகச் சந்தைப்படுத்தப்பட வேண்டும். எனவே உள்ளூர் சந்தைகளோடு சர்வதேசச் சந்தைகளையும் எமது விளைபொருட்கள் சென்றடைய வேண்டும். எனது பிற நாட்டு அனுபவமும் அங்கு காணப்பட்ட இயற்கைமுறை விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பும் என்னுள் இருந்த ஆர்வத்தை இரட்டிப்பாக்கியது.
எனவே நீண்ட நாட்களுக்குப் பின் எனது கிராமத்துக்குத் திரும்பியவுடன் விவசாயத்தையே எனது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளேன். அதுவும் மற்றவர்கள் போல் சிந்திக்காது சிலவற்றை தெரிவு செய்து அவற்றையே ஏக்கர் கணக்கில் பயிரிடுகிறேன்.இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. பெரும்போகச் செய்கையாக யாழ்ப்பாணத்தில் காணப்படும் புகையிலைச் செய்கையை இலங்கை அரசு எதிர்வரும் 2020 முதல் தடைசெய்யவுள்ளது. எனவே அதற்கு ஒரு மாற்றீடு தேவை என்று கருதப்பட்டது முதல் காரணம். இரண்டாவதாகக் கிராமத்துப் பொருளாதாரம் மேம்பட வேண்டும், கிராமத்துத் தோட்டச் செய்கையாளர்கள் பயனடைய வேண்டுமெனில் அவர்கள் உள்நாட்டு சந்தையை மட்டும் கருத்தில் கொள்ளாது சர்வதேசச் சந்தையையும் கணக்கில் எடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
இந்தியாவின் கேரள மாநிலத்தை எடுத்துக் கொண்டால் தினமும் திருவனந்தபுரம் விமான நிலையத்தினூடாகப் பல தொன் பச்சைக் காய்கறிவகைகள் ஏற்றுமதியாகின்றன. இதில் புதுமையான விடயம் என்னவெனில் எமது கிராமத்தில் கிளியின் உணவாகக் காணப்படும் கொவ்வைக் காய்கள் அதிகளவில் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. அப்படியான பச்சைக் காய்கறிவகளை ஏற்றுமதி செய்வதற்கு எமக்கு அண்மையில் விமான நிலையமில்லை. ஆனால் அதே அளவு சர்வதேசச் சந்தைப் பெறுமானம் உலர்த்தப்பட்ட காய்கறிகளுக்கும் உண்டு. எனவே நாம் இயற்கை முறையாக உலர்த்திப் பதனிடுவதை ஊக்குவித்தால் நல்ல பெறுபேற்றை அடையலாம்.
மற்றவர்கள்போல் சிந்திக்காது விசேடமாகச் சிந்தித்துச் செயற்படுவதாகக் கூறினீர்கள்.என்னென்ன வகை உற்பத்திகளை மேற்கொள்ளுகிறீர்கள்? அவற்றைச் சேமிப்பதற்கு என்ன நடைமுறைகளைக் கையாளுகிறீர்கள்?
மனித ஆரோக்கியத்திற்கு வளமூட்டக்கூடியவைகள் என சிலவற்றைத் தெரிவுசெய்து அவற்றை உள்ளூர் சந்தைகளில் விற்றுப்போக எஞ்சியவற்றை சூரிய ஒளிக்கதிர்களால் அவற்றில் உள்ள நீரைப்போக்கி நன்கு உலர்த்திச் சேமித்து வைக்கிறேன். அதைப் பின்னர் எனக்குக் கிடைக்கும் நுகர்வோர் தேவைக்கேற்றவாறு உள்ளூரிலும் விற்கிறேன். பிற நாடுகளுக்கும் அனுப்புகிறேன்.அதற்குரிய இயற்கைமுறை உலர்த்தி ஒன்றினை வீட்டின் முற்றத்திலேயே நான் வடிவமைத்து வைத்திருக்கிறேன்.
தொடக்கத்தில் புதிய இன வாழை,பப்பாசி என்பனவற்றை ஏக்கர்களில் பயிரிட்டிருக்கிறேன். பல அனுபவங்களுக்குப் பிறகு தற்போது குறிப்பாக சுண்டங்கத்தரியையும், பாவற்காயையும் அதிகளவில் பயிரிடுகிறேன். அவற்றைத் தெரிவு செய்ததற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமாக இரண்டுமே எமது காலநிலைக்கேற்றவாறு பயிரிடக்கூடியவையும் அதிகளவு பயன்தரக் கூடியவையாகவும் இருக்கிறது. அத்துடன் அதிக ஆரோக்கியமானவையும் , அதிக காலம் சேமித்து வைக்கக் கூடியவைகளும் , பெருமளவு சந்தைப் பெறுமானமும் உள்ளவையாகக் காணப்படுகின்றன. அத்துடன் குப்பிளான், ஏழாலைப் பகுதிகள் இயல்பாகவே பாவற்காய் அதிகம் பயிரிடுகின்ற பிரதேசங்களாகவும் இருக்கிறது. அவற்றுடன் அறுகம்புல்லு, முடக்கொத்தான்,சிறு குறிஞ்சா, முருங்கை இலை, கரட் போன்றவற்றையும் பருவகாலத்தில் கிடைப்பதற்கேற்றவாறு இயற்கை முறையில் பதப்படுத்திப் பதனிட்டுச் சிலவற்றைப் பவுடர்களாகவும் சேமித்து வைத்து விற்பனை செய்கிறேன்.
அத்துடன் மிக முக்கிய விடயமாகச் சுண்டங்கத்தரியைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். குறைந்த செலவில் அதிகளவு பயன்தரக்கூடியதொன்று என்றதைவிட கிருமிநாசினி, செயற்கை உரம் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் அவற்றை செய்யலாம் என்றதில் வெற்றி கண்டுள்ளேன். ஆரம்பத்தில் கிருமிநாசினி. செயற்கை உரம் என்பனவற்றைப் பயன்படுத்தினாலும் அதைத் தொடர்வதற்கு எனது மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை. இயற்கை விவசாய முறைக்கு மாறினேன். முன்பு அரை ஏக்கரில் கிடைத்த விளைச்சல் தற்போது ஒண்டரை ஏக்கரில் கிடைக்கிறது. ஆனால் நல்லவற்றை கொடுக்கிறோம் என்பதில் திருப்தி இருக்கிறது. அத்துடன் செலுவுதொகையோடு பார்த்தால் கணிசமான அளவு லாபத்தொடு அறுவடையைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இயற்கை விசவாயப் பொருட்களின் நன்மை பற்றிய முறையான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியபின் சந்தைப்படுத்துவோமானல் நல்ல பலனைப் பெறலாம். அத்துடன் அழுகிவிடும் என்று பயப்படத்தேவையும் இல்லை. பதப்படுத்துகின்ற முறையைக் கற்றுக் கொண்டால் அவற்றைச் சேமித்து வைத்து நல்ல பலனைப்பெறலாம். அதற்குரிய வசதி இல்லாதவர்கள் என்னைப் போன்றவர்களோடு வியாபாரப் பிணைப்பொன்றைச் செய்து கொண்டு தமது விளைபொருட்களை சந்தைப்படுத்தலாம். உதாரணத்திற்குக் கடந்த போகத்தில் பாவற்காயைச் சந்தைப் பெறுமானத்தை விட அதிக அளவு பெறுமதியைக் கொடுத்து அவர்களிடம் வாங்கி இருக்கிறேன்.
கடந்த பலாப்பழப் பருவத்தில் பலாச் சுழைகளையும் பரிசோதனை முறையில் உலர்த்திப் பதனிட்டுப் பார்த்திருக்கிறேன். அது சார்ந்த அரச அதிகாரிகளுக்குக் கொடுத்தபோது அவர்களும் அதன் தரத்தை உறுதி செய்ததோடு மட்டுமல்லாமல் அதனை ஊக்குவித்திருக்கிறார்கள்.இனிவருங் காலங்களில் மாம்பழம், பலாப்பழம், வாழைப் பழம் என்பனவும் எனது பட்டியலில் இடம்பெறும்.இவைகள் அனைத்தும் அதற்குரிய பருவகாலங்களில் மிகவும் அடிமட்ட விலைக்குச் செல்வதோடு பெருமளவில் கழிவுகளாக்கப்படுகின்றன. கடந்த போகத்தில் பலாப்பழம் தேடுவாரற்றுக் காணப்பட்டுக் கால்நடைக்கு உணவாகவும் கொடுத்திருந்தனர்.
இப்படியான விடயங்களைக் கற்றுக் கொண்டு பிறருக்கும் சொல்லிக் கொடுத்து அவர்களை ஊக்குவிக்கின்ற நீங்கள் இன்னும் அவர்களை மேம்படுத்த என்ன விடயங்களை நடைமுறைப்படுதலாம் என்று எண்ணுகிறீர்கள்? உங்கள் ஆலோசனைகள் என்னவாக இருக்கும்?
இலங்கையில் அதிக வளம் உள்ள பூமி வடமாகாணம் என்றுதான் சொல்லுவேன். அந்த வளத்தை வளமாகப் பயன்படுத்த எமக்குத் தெரியவில்லை.எமது வலிமை எமக்குத் தெரியவில்லை உலகம் எம்மைத் திரும்பிப் பார்க்க வேண்டுமெனில் பொருளாதாரத்தில் நாம் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எமது பொருளாதாரத்தை உயர்த்துவதற்குக் கிராமமட்டங்களில் போதியளவு வளங்கள் உண்டு என்பது பற்றிய விழிப்புணர்வை நாம் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். வடக்கில் காணப்படும் பெரும்பாலான கிராமங்கள் விவசாயத்தைத் தமது பொருளாதாரமாகக் கொண்டுள்ளபடியால் நாம் மெல்ல மெல்ல இயற்கை முறைக்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் அனைத்து வளங்களையும் உபயோகிப்பவர்களாக இருப்போம்.. இயற்கையை நேசிக்கின்ற பண்பு எம்மிடையே வளர வேண்டும். சுருங்கச் சொன்னால் நாம் உடனடியாகச் சூழல் நேயராக வேண்டும் – என்கிறார் ஞானமூர்த்தி விக்கினேஸ்வரமூர்த்தி.
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்க முர்த்தி சொல்லும் வழிமுறைகள் பொருத்தமானவையாகத் தென்படுகிறது. மக்களுக்கு ஏட்டில் காண்பிப்பதைவிட மூர்த்திபோன்றோரின் செய்கை முறைகளே அதிக பலனையும், விழிப்புணர்வையும் தரும் என்பது எனது கருத்து. மூர்த்தியைப் பார்த்துப் பலர் மாறியிருக்கின்றனர். அவர் பலரை மாற்றியும் இருக்கிறார். எல்லாவற்றிலும் பலம் பெற்ற ஒரு சமூகமாக மாறிக் கொள்வதையே சிறந்த இராஜதந்திரமாகக் கொள்ள வேண்டும்.பலம் இன்றேல் பயன் இல்லை என்ற மூர்த்தியின் எண்ணங்களோடு நாமும்