குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில்.வீதி விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த இரு முதியவர்கள் சிகிச்சை பயனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளனர். புலோலி கோழிக்கடைச் சந்தியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் புலோலி வடக்கைச் சேர்ந்த கந்தசாமி குலநாயகம் (வயது-84) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
இறப்பு வீடு ஒன்றுக்குச் சென்று வீடு திரும்பிய முதியவர் வீதியைக் கடந்தபோது மோட்டார் சைக்கிள் மோதியது என்று தெரிவிக்கப்பட்டது. அதேவேளை கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கிய வல்வெட்டித்துறையை சேர்ந்த வேலுப்பிள்ளை அரியரட்ணம் (வயது 68) என்பவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் கடந்த பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்தார்.
குறித்த முதியவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது ஆவரங்கால் பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கூலர் ரக வாகனத்தின் கதவினை திடீரென சாரதி திறந்ததால் விபத்து ஏற்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.