வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டுசெல்லும் சதித்திட்டத்திற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பும் உடந்தையாக இருக்கின்றது. எனினும் வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வைபெற்றுக்கொடுக்க ஜனாதிபதியே முன்னின்று செயற்படுகின்றார் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிந்துகொள்ளவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களின் காணிப்பிரச்சினை, அங்கு நிறுவப்பட்டிருக்கும் தேவையற்ற இராணுவ முகாம்களை அகற்றுதல் மற்றும் அபிவிருத்தி போன்ற நடவடிக்கைகளை ஜனாதிபதி துரிதமாக மேற்கொண்டுவருகின்றார். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேற்று வெளிநாட்டு ராஜதந்திரிகளை அழைத்து நாட்டு நிலைமை தொடர்பாக கதைத்த போது அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போதைய அரசியல் பிரச்சினையானது சர்வதேசத்துக்கு தெரிவிக்கவேண்டிய அளவுக்கு ஒன்றுமில்லை. ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தொடர்பான பிரச்சினை. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தப்படாமல் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.