ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் சட்டசபையைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார். காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. எனினும் இரு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது
இதனால் தனது முதலமைச்சர் பதவியிலிருந்து மெகபூபா முப்தி விலகியதனையடுத்து அங்கு ஆளுனர் ஆட்சி அமுலுக்கு வந்தது. இதனையடுத்து காங்கிரஸ் மற்றும் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவுடன் அங்கு மீண்டும் ஆட்சி அமைக்க மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி திட்டமிட்ட நிலையில் இன்று மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுனர் சத்தியபால் மாலிக்கிடம் கடிதம் கொடுத்தார்.
எனினும் ஆளுனர் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையை கலைப்பதாக உத்தரவிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு சட்டம் வழங்கிய விதிகளின் அடிப்படையில் சட்டசபையை கவர்னர் கலைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.