குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமகால அரசியல் தொடர்பான கருத்தமர்வு இன்று (22) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாற்றாற்றல் கொண்டோர் அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது. தேசிய சமாதானப் பேரவையின் நிதி அனுசரணையில், மன்னார் மாவட்ட ஓப்புன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் மற்றும் அதன் நிலவரங்கள் தொடர்பிலான கருத்தமர்வு இடம் பெற்றது.
குறித்த கருத்தமர்வில் தேசிய சமாதானப்பேரவையின் ஊடகவியலாளர் உப குழு, பெண்கள் உப குழு , இளைஞர் உப குழு உள்ளூர் அரசியல் வாதிகள் உபகுழு,மாற்றுத் திறனாளிகள் உப குழு ஆகியவற்றின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.
தற்போதைய சூழலில் நாட்டில் உள்ள அரசியல் குழப்ப சூழ் நிலைகள் , சட்டச் செயற்பாடுகள், யாப்பு-19ம் சட்ட சீர் திருத்தம் , ஜனாதிபதியின் அதிகாரங்கள் போன்றவை பற்றிய தெளிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
குறித்த கருத்தமர்வின் போது தற்போது இலங்கை பாராளுமன்றத்தில் இடம் பெற்று வருகின்ற பல்வேறு அரசியல் பிரச்சினைகள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த கருத்தமர்விற்கு வளவாளராக சட்டத்தரணி வில்பட் அர்ஜீன் மற்றும் , ஓப்பின் நிறுவனத்தின் அதிகாரிகள், தேசிய சமாதான பேரவையின் மன்னார் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர். பொதுவாக மக்களுக்கு தற்போதைய நாட்டின் நிலவரம் பற்றிய தெளிவு படுத்தப்பட வேண்டிய சூழல் அமைந்துள்ளது. அதையே தேசிய சமாதான பேரவை செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.