தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதுபோல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மஹிந்த ராஜபக்ஷ விலைக்கு வாங்கிவிட்டார் என்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஜனநாயக ஆட்சி ஒழிக்கப்பட்டு, அமைக்கப்பட்டுள்ள காட்டாட்சியை மாற்றியமைக்க அனைத்து சக்திகளும் ஓரணியில் திரளவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னிடம் தொலைபேசி ஊடாக பேரம் பேசியதாகவும் அதை தாம் அம்பலப்படுத்தியதாகவும் குறிப்பிட்ட அவர் ஜனாதிபதியொருவரே அரசமைப்பை அப்பட்டமாக மீறும் வகையில் செயற்படுவது பாரதூரமான செயல் என்றும் கூறினார்.
வாக்கெடுப்பை தடுப்பதற்காக பிரபாகரனுக்கு மஹிந்த அன்று நிதி வழங்கியதாக குறிப்பிட்ட அவர், அவ்வாறே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மகிந்த பணம் வழங்கியிருக்கலாம் என்ற கருத்து சமூகத்தில் நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.
அரசமைப்பின் பிரகாரம் ஆட்சிமாற்றம் இடம்பெறவில்லை என்றும் தலைகளுக்கு கோடிகளை வழங்கியே மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்திய, பாலித ரங்கே பண்டார, மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் கூட பேரம் பேசும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் இதற்கு சில பேராசிரியர்களும் இதற்கு துணைபோயுள்ளதாகவும் தெரிவித்தார்.